search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகிங்கியாக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்கிறது மியான்மர்: வங்காளதேச பிரதமர் குற்றச்சாட்டு
    X

    ரோகிங்கியாக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்கிறது மியான்மர்: வங்காளதேச பிரதமர் குற்றச்சாட்டு

    ரோகிங்கியாக்கள் மீது மியான்மர் அரசு வன்முறைகளை பிரயோகிப்பதாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக வங்காளதேசத்திற்கு வந்துள்ளனர்.

    இந்த நிலையில், ரோகிங்கியா முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று பார்வையிட்ட பிறகு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-

    ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக மியான்மர் அரசு பல கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. புத்தமதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மர் நாடு, அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளவர்கள், மீண்டும் மியான்மர் திரும்புவதற்கான உரிய நடவடிக்கையை அந்த நாடு எடுக்க வேண்டும்.

    மேலும், அண்டை நாடுகளுடன்  நாங்கள்(வங்காளதேசம்) நட்புறவையே விரும்புகிறோம். ஆனால், பொதுமக்கள் மீதான எந்த வகையான அநீதியையும் நாங்கள் சகித்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டோம். இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை நாங்கள் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம். வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வங்காளதேசம் உரிய உதவிகளை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×