search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீதான அமெரிக்கா தீர்மானம்: பாதுகாப்பு கவுன்சிலில் திருத்தங்களுடன் நிறைவேறியது
    X

    வடகொரியா மீதான அமெரிக்கா தீர்மானம்: பாதுகாப்பு கவுன்சிலில் திருத்தங்களுடன் நிறைவேறியது

    வடகொரியா மீது வலுவான தடை கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் திருத்தங்களுடன் நிறைவேறியது.
    நியூயார்க்:

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

    சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.

    இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது.

    அதில், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்-க்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

    வடகொரியாவின் பெரும்பாண்மையான எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா பூர்த்தி செய்து வரும் நிலையில் இந்த இரண்டு நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்குமா? அல்லது வாக்களிக்காமல் புறக்கணிக்குமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த தீர்மானம் நேற்று வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது. ஆனால், வடகொரிய தலைவரின் சொத்துக்களை முடக்குவது மற்றும் அந்நாட்டுக்கான பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷ்யா மற்றும் சீனா ஏற்கவில்லை என தெரிகிறது.

    இதனால், சீனா மற்றும் ரஷ்யாவிடம் அனுசரித்து போகும் விதமாக இந்த தீர்மானத்தில் அமெரிக்க திருத்தங்களை மேற்கொண்டது. மேற்கண்ட அம்சங்களை நீக்கி விட்டு வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.

    அமெரிக்காவின் இந்த தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. ஏற்கனவே, பலமுறை வடகொரியாவுக்கு எதிராக பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களுக்கு தடை மற்றும் கிம் ஜாங் உன் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறினால் அதற்காக அமெரிக்கா பெரும் விலையை அளிக்க நேரிடும் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
    Next Story
    ×