search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரியும் வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் - ‘இர்மா புயலின் போது கடைகளை வேட்டையாடிய கும்பல்
    X

    எரியும் வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் - ‘இர்மா' புயலின் போது கடைகளை வேட்டையாடிய கும்பல்

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘இர்மா' புயல் தீவிரமாக வீசி வரும் நிலையில், அந்த சூழலை பயன்படுத்தி அங்குள்ள கடைகளை கொள்ளையடித்த கும்பலை கேமரா மூலமாக போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர்.
    புளோரிடா:

    வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் கரீபியன் தீவுகளை பதம் பார்த்து விட்டு தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வீட்டின் கூறைகள் பறந்த வண்ணம் உள்ளதாலும், சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதாலும் மாநிலமே அல்லல் பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல சுற்றுலா தளமான மியாமி அருகே உள்ள ஃபோர்ட் லவுடர்டேல் நகரில் புயலின் பாதிப்பை பயன்படுத்தி ஒரு கும்பல் கடை ஒன்றை கொள்ளையடித்துள்ளது.

    நிலை கொள்ளாமல் வீசும் காற்றையும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக சுமார் 10 பேர் கொண்ட கும்பல் விளையாட்டு உபகரணங்களை கொண்டுள்ள அந்த கடையை கொள்ளையடித்துள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த கொள்ளை சம்பவம் உள்ளூர் தொலைக்காட்சி ஊடகத்தின் கேமராவில் சிக்கிக்கொண்டது.

    கடையின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஒவ்வொருவராக உள்ளே செல்வதும், கையில் கிடைத்த அட்டைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியேறுவது என அனைத்து காட்சிகளும் கேமராவின் கண்ணில் இருந்து தப்பவில்லை.



    ஃபோர்ட் லவுடர்டேல் போலீசாரின் பார்வைக்கு இந்த வீடியோ காட்சி சென்றதும், பொறுமையாக திருட்டில் ஈடுபட்ட 9 பேர் மற்றும் இதில் தொடர்புடைய இருவர் என மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளனர். இதே கும்பல் அப்பகுதியில் மேலும் 3 கடைகளை கொள்ளையடித்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

    புயல், மழை போன்ற அசாதரண சூழ்நிலையை பயன்படுத்தி இது போன்ற திருட்டில் ஈடுபடுவர்கள் கம்பி எண்ணுவதில் இருந்து தப்பிக்க முடியாது என போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

    இந்தியாவின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கூட இதுபோன்ற பெரிய அளவிலான திருட்டு சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×