search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ மோடி மற்றும் ஜின்பிங் ஒப்புதல் - பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தை
    X

    இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ மோடி மற்றும் ஜின்பிங் ஒப்புதல் - பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தை

    சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தையில் இந்திய - சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
    பீஜிங்:

    சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தையில் இந்திய - சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

    சீனாவின் துறைமுக நகரான ஷியாமென் நகரில் பிரிக்ஸ் நாடுகளின்(பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு) 9-வது வருடாந்திர உச்சி மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். அப்போது இரு நாடுகளின் உறவையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    அப்போது பிரதமர் மோடி, சீன அதிபர் பிரிக்ஸ் மாநாட்டை சிறந்த முறையில் நடத்தியதற்கும், பிரிக்ஸ் நாடுகளை உலகின் மாறிவரும் மாற்றத்துக்கு ஏற்ப ஒரு குழுவாக உருவாக்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அண்மையில் குவிக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது குறித்து 2 தலைவர்களும் பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    அதன்படி மோடியும், ஜின்பிங்கும் டோக்லாம் விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் நேரடியாக டோக்லாம் பிரச்சினை என்று குறிப்பிடாமல் இந்த பேச்சு நடந்தது. அப்போது எல்லையில் 2 நாடுகளும் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்து செல்ல இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

    ஜின்பிங்கை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் எங்களது சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

    சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுனாங் கூறும்போது, சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமரை சந்தித்தபோது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளவேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் விடுப்பது கூடாது. நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமாகவும், ஸ்திரத்தன்மை கொண்டதாகவும் அமையவேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தியாக தெரிவித்தார்.

    இந்தியா-சீனா இடையேயான உறவு சரியான பாதையில் செல்லவேண்டும் என்றால் தற்போது நடைமுறையில் உள்ள பஞ்சசீல கொள்கையின் அடிப்படையில் அமையவேண்டும் என ஜின்பிங், பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டதாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஷின்குவா தெரிவித்தது. 
    Next Story
    ×