search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகமான வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
    X

    வேகமான வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

    சீனாவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்டார்.
    பீஜிங்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 8-வது மாநாடு கடந்த ஆண்டு இந்தியாவின் கோவா நகரில் நடந்தது.

    அதனை தொடர்ந்து தற்போது 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றார்.


    இன்று பிரிக்ஸ் மாநாடு துவங்கியதும் கூட்ட அரங்கிற்கு மூன்றாவது தலைவராக மோடி வந்தார். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி அவருடன் சிறிது நேரம் பேசினார்.


    பின்னர், இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு நமக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என குறிப்பிட்டார்.

    இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கிய நோக்கமே வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையிலானது. இவ்வகையில், நமக்குள்ளான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


    நமக்குள் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார தேவைகளை கண்டறியவும் பூர்த்தி செய்யவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. காகிதப் பணப் பரிமாற்றத்துக்கு நிகரான டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன் நிரந்தரமான முன்னேற்றத்தையும் நாம் அடைய முடியும்.

    நமது குறிக்கோளின்படி உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான முன்னேற்றத்துக்காக தற்போது புதிய மேம்பாட்டு வங்கியின் நிதி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரியஒளி ஆற்றலை சிறப்பாக பயன்படுத்துவதற்கான திறமையும் சக்தியும் நமது அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளும் உண்டு. இதற்காக சர்வதேச சூரிய ஆற்றல் அமைப்பில் நாம் இணைந்து பாடுபட வேண்டும். புதிய மேம்பாட்டு வங்கியின் நிதியை பயன்படுத்தி தூய்மையான எரிசக்தியை நாம் உருவாக்க வேண்டும்.

    வர்த்தகமும், பொருளாதாரமும் தான் நமது கூட்டுறவின் முக்கிய நோக்கம் என்றாலும், தொழில்நுட்பம், பாரம்பரியம், விவசாயம், சுற்றுச்சூழல், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளிலும் நமது முன்னெடுப்புகள் விரிவடைந்துள்ளன.

    வறுமை ஒழிப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், கழிவுநீர் அகற்றல், திறன் மேம்பாடு, உணவு பாதுகாப்பு, பாலின சமநிலை, எரிசக்தி மற்றும் கல்வியில் இந்தியா சாதனை புரிந்துள்ளது. பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்கள் நாட்டின் கட்டமைப்பில் உறுதுணையாக உள்ளன. ஊழல் மற்றும் கருப்புப்பண ஒழிப்புக்கான போரில் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம்.

    எங்கள் நாட்டின் அனுபவத்தை வைத்து முன்னேறினால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் வெற்றிகரமான பலன்களை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×