search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் சீக்கிய என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை
    X

    அமெரிக்காவில் சீக்கிய என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை

    அமெரிக்காவில் சீக்கிய என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொல்லப்பட்டார். அவர் இனவெறி தாக்குதலில் பலியாகி உள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சீக்கிய என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொல்லப்பட்டார். அவர் இனவெறி தாக்குதலில் பலியாகி உள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்றதைத் தொடர்ந்து அங்கு இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்திய வம்சாவளியினரும், சீக்கியர்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

    கடந்த ஜூலை மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே வாரத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் 2 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

    மார்ச் மாதம், கென்ட் நகரில் 39 வயது சீக்கியர் ஒருவர் சுடப்பட்டார். இது ஒரு இன வெறி தாக்குதல் சம்பவம் ஆகும்.

    இந்த நிலையில் அங்கு மற்றொரு சீக்கிய வாலிபர் குத்திக்கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்க வாழ் சீக்கிய மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்த தகவல்கள் வருமாறு:-

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், ஸ்போகனே என்ற இடத்தில் 2003-ம் ஆண்டு முதல் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், ககன்தீப் சிங் (வயது 22). இவர் அங்கு கான்ஜாகா பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு படித்துக்கொண்டே அவர் பகுதி நேர வேலையாக வாடகைக் கார் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில், அங்கு கடந்த 28-ந் தேதி அவர் சவாரிக்காக ஸ்போகனே சர்வதேச விமான நிலையத்தில் காருடன் காத்திருந்தார். அப்போது சியாட்டில் நகரில் இருந்து அங்கு வந்திறங்கிய ஜேக்கப் கோல்மேன் (19), என்பவர், அவரது காரை போனர் கவுண்டியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு ஓட்டுமாறு கூறினார். காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போதே இருவரும் அறிமுகம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    ககன்தீப் சிங், நீண்ட நேரம் காரை ஓட்டியும் கோல்மேன் கூறிய முகவரியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், அவர் தவறான முகவரியை சொல்லி தன்னை அலைக் கழித்திருக்கிறார் என உணர்ந்தார்.

    இந்த நிலையில், ககன்தீப் சிங் காரை கூட்டனாய் என்ற இடத்தில் நிறுத்தினார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், காரில் வந்த கோல்மேன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி சாய்த்தார். இதில் ககன்தீப் சிங் காரிலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

    அதைத் தொடர்ந்து கோல்மேன் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு கான்ஜாகா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத நிலையில், காரை ஓட்டி வந்த ககன்தீப் சிங் அங்கு இடம் கிடைத்து படித்து வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்ததாகவும், காரில் வரும் வழியில்தான் கத்தியை வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டார்.

    அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட ககன்தீப் சிங்கின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் ஆகும். அவர் ஜலந்தர் பகுதி காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங் ராஜூவின் நெருங்கிய உறவினர் என தகவல்கள் கூறுகின்றன. ககன்தீப் சிங்கின் தாயார் கமல்ஜித் கவுர், கடைசியாக தனது மகனுடன் செல்போனில் பேசியபோது, அவர் ஒரு வெள்ளைக்காரரை காரில் ஏற்றிக்கொண்டு சவாரி சென்று கொண்டிருப்பதாக கூறியதாகவும், அந்த நபரைப்பற்றி தான் விசாரித்தபோது, அவர் ஒரு ஜென்டில் மேன் என கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அப்படிப்பட்ட ஜென்டில்மேன் இப்போது தனது மகனை குத்திக்கொன்று விட்டாரே என அவர் வேதனையுடன் கூறினார்.

    ககன்தீப் சிங் படுகொலை குறித்து அவரது உறவினரான மன்மோகன்சிங் ராஜூ கூறுகையில், “ எனது உறவினர் ககன்தீப் சிங் இனவெறி தாக்குதலுக்குத்தான் பலியாகி உள்ளார். டிரம்ப் அரசு, ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கதவுகளை அடைத்து வருகிறது. இந்தியர்களும், பிற ஆசிய நாட்டவர்களும் அமெரிக்கர்களின் இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர்” என்று குறிப்பிட்டார். 
    Next Story
    ×