search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் அரக்கனிடம் இருந்து உங்கள் பிள்ளைகளின் உயிரை பாதுகாப்பது எப்படி?
    X

    தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் அரக்கனிடம் இருந்து உங்கள் பிள்ளைகளின் உயிரை பாதுகாப்பது எப்படி?

    இந்தியாவில் புளூ வேல் விளையாட்டுடன் பல இளைஞர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்புப்படுத்தப்படும் நிலையில் உங்கள் பிள்ளைகளின் உயிரை பாதுகாப்பது எப்படி? என்பதை அறிந்து கொள்வோமா?
    மாஸ்கோ:

    தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.

    2015- 2016 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் புளூ வேல் இளம் உயிர்களை பறித்து வருகிறது.

    முதலில் அதிகாலை 4.20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் தொடங்கி, தங்களது உடலில் கூர்மையான ஆயுதங்களால் கீறல்களை ஏற்படுத்தி நீல திமிங்கலத்தின் படத்தை வரைவது, தனியாக அமர்ந்து திகில் படம் பார்ப்பது, உள்பட நள்ளிரவு நேரங்களில் தனியாக கல்லறை மற்றும் சுடுகாடுகளில் சுற்றித் திரிவது. கடற்கரைகளில் அகால வேளைகளில் செல்வது, ஆபத்தான இடங்களில் அசத்தாலாக ஏறுவது என இந்த விளையாட்டின் வடிவமைப்பாளர்கள் ஏவும் அனைத்து (50) கட்டளைகளையும் நிறைவேற்றும் வெற்றியாளர்களுக்கு ‘தானே தற்கொலை’ என்ற பரிசுதான் வெற்றிக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதியாக அவர்களுக்கான தற்கொலை தேதியையும் புளூ வேல் நிர்ணயிக்கின்றது. இந்த தற்கொலை எண்ணத்திற்கு மாற்றாக முடிவெடுக்கும் நபர்கள் பற்றிய இணையவழி ரகசியங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என்ற மிரட்டலால் மகுடிப்பாம்பாய் இதற்கு பலர் கட்டுப்பட்டு கிடக்கின்றனர். கடைசியில் அவர்கள் விபரீதமான வகையில் மரணத்தை தேடிக்கொள்ளும் கோரக் காட்சியும் சமூக வலைத்தளங்களில் பதிவாவதால் புளூ வேல் தற்கொலைகளை சொர்க்கலோகத்துக்கு செல்லும் மார்க்கமாக பார்க்கும் அளவுக்கு இந்த விளையாட்டு பலரை பித்தர்களாக மாற்றி விடுகின்றது.

    புளூ வேல் விளையாட்டு மோகத்தால் கடந்த மாதம் 30-ம் தேதி மும்பையில் 14 வயது சிறுவன் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தான். கடந்த 12-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தனது வீட்டு பாத்ரூமுக்குள் தற்கொலை செய்துகொண்டு பலியானான்.

    தற்போது, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆஷிக்(20) தனது படுக்கை அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதற்கு முன்னரும் கேரளாவை சேர்ந்த இரு மாணவர்கள் புளூ வேல் வெறியாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் புதன்கிழமை டெல்லியில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பத்திலும் புளூ வேல் அரக்கனின் விரட்டல்தான் காரணம் என்று கருதப்படுகிறது.

    இந்த விளையாட்டுக்கு மூளையாகவும், முன்னோடியாகவும் ரஷியாவில் முன்னர் நடந்த பல தற்கொலைகள் சுட்டிக்காட்டப்படுகிறது.

    ரஷியாவை சேர்ந்த பிலிப் புடேய்க்கி என்னும் நபர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இணையதளத்தின் வழியாக உலகம் முழுவதும் பலரை தொடர்புகொண்டு, நட்பு பாராட்டி வந்துள்ளார். அவர்களின் துன்பங்கள், துக்கம், துயரம், சோகம் ஆகியவற்றை எல்லாம் அறிந்துகொண்டு மீள முடியாத துயரத்தில் இருப்பவர்கள் மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் ஆகியோரை கடைசியாக தற்கொலைப் பாதையை நோக்கி இவர் வழிகாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, விளக்கம் அளித்த பிலிப் புடேய்க்கி, ‘இவர்கள் எல்லாம் மனிதக் கழிவுகள். இவர்களை ஒழித்துக்கட்டி நல்லவர்களுக்காக தூய்மையான சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபட்டு வந்துள்ளேன்’ என மிக கூலாக பதிலளித்தார். இந்த ஆபத்து தொடங்கிய ரஷியாவில் கடந்த மே மாதம் புளூ வேல் விளையாட்டுக்கு தடை விதித்து அந்நாட்டு பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

    புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளூ வேல் விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அனைத்து ‘ஆப்ஸ்’களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.

    எனினும், புளூ வேல் மோகம் நமது மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடையே தீராத தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆன்லைன் விளையாட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற ஆப்களின் மூலம் ரகசியமாக விளையாடப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில், நமது வீட்டுப் பிள்ளைகளும் புளூ வேல் விளையாட்டுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்களா? என்பதை கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டிய அவசியத்துக்கு பெற்றோர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணித்து கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நாம் சந்தேகிக்கும் அனைத்து செயலிகளையும் அவர்களின் கைபேசிகளில் இருந்து நாம் நீக்க வேண்டும்.

    இவ்வளவு நாட்களாக குடும்பத்தாருடன் கலகலப்பாக பழகிவந்த உங்கள் பிள்ளைகள் திடீரென தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனரா? வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எழுந்திருக்கும் புதிய பழக்கம், நேரம்கெட்ட நேரங்களில் வீட்டைவிட்டு செல்வதும், வீட்டுக்கு வருவதுமாக அவர்கள் இருந்தால் அவர்களின் விசித்திரமான மாற்றங்களுக்கான காரணத்தை உடனடியாக பெற்றவர்கள் கேட்டறிய வேண்டும்.

    இந்த புளூ வேல் அரக்கனிடம் நமது பிள்ளைகளை பறிகொடுத்த பின்னர் கதறிப் புலம்புவதைவிட, அகால மரணம் நேர்வதை தடுக்கவும், தவிர்க்கவும் 'வரும்முன் காப்போம்’ நடவடிக்கையில் பெற்றவர்கள் சற்று கறாராகவும், கடுமையாகவும் நடந்து கொள்வதில் தவறில்லை. இந்த கண்டிப்பின் மூலம் நமது பிள்ளைகளின் மனம் சிறிது காயப்படும் என்பது உண்மைதான்.

    ஆனால், விலைமதிப்பில்லாத நமது நாட்டின் எதிர்காலத் தூண்களின் இன்னுயிரை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிட கூடாது.
    Next Story
    ×