search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீது அமெரிக்கா போர் நடத்துமா?: தென் கொரியா அதிபர் கருத்து
    X

    வடகொரியா மீது அமெரிக்கா போர் நடத்துமா?: தென் கொரியா அதிபர் கருத்து

    குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியா மீது அமெரிக்கா போர் நடத்துமா? என்ற கேள்விக்கு தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன் பதில் அளித்துள்ளார்.
    சிங்கப்பூர்;

    குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சிங்கப்பூர் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன் வடகொரியா மீது ராணுவ ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தென் கொரியாவுடன் அமெரிக்கா நிச்சயமாக ஆலோசனை நடத்தும் என்று தெரிவித்தார். எனவே, கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்கள் அமெரிக்கா - வடகொரியா இடையே போர் மூளும் என அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக, வடகொரியா மீது எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முன்கூட்டியே தென் கொரியாவுக்கு தெரிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மூன் ஜே-இன் சுட்டிக் காட்டினார்.
    Next Story
    ×