search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் வசிக்கும் இந்தியா-பாகிஸ்தான் தம்பதி ரவிசங்கர், ஆர்த்தி தங்கள் குழந்தைகளுடன் உள்ளனர்.
    X
    துபாயில் வசிக்கும் இந்தியா-பாகிஸ்தான் தம்பதி ரவிசங்கர், ஆர்த்தி தங்கள் குழந்தைகளுடன் உள்ளனர்.

    துபாயில் வசிக்கும் இந்தியா- பாகிஸ்தான் தம்பதியரின் ஒற்றுமை பிரசாரம்

    துபாயில் வசித்து வரும் இந்தியா- பாகிஸ்தான் தம்பதியர், இரு நாடுகளின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    துபாய்:

    துபாயில் வசித்து வருபவர் ரவி சங்கர். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். ரவிசங்கர் துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக இருவருக்கும் பொதுவான நண்பரின் பிறந்தநாள் விழாவில் முதல் முதலாக சந்தித்தனர். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. நீண்ட நாட்கள் பழகி வந்தனர். இவர்களுடைய திருமணத்துக்கு ரவிசங்கரின் வீட்டில் சம்மதம் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த ஆர்த்தியின் தந்தை முதலில் சம்மதிக்கவில்லை.

    நாளடைவில் அவரிடம் இருந்தும் சம்மதம் கிடைத்தது. இதை தொடர்ந்து ரவிசங்கர்- ஆர்த்தி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர்.

    இந்த காதல் தம்பதியர், இந்தியா- பாகிஸ்தான் சுதந்திர தின விழாக்களின் போது இரு நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக அனைவரிடத்திலும் பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்தியா- பாகிஸ்தானை சேர்ந்த முதல் இந்து மதத்தை சேர்ந்த தம்பதி நாங்கள் மட்டுமாகத்தான் இருப்போம் என நினைக்கிறோம்.

    கடந்த 2011- ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது எங்களின் பாஸ்போர்ட்டுகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் வியந்து போனார்கள்.

    இந்தியா-பாகிஸ்தான் தம்பதி என்பதை அறிந்து இருவரையும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். இதனால் எங்கள் மனதிற்குள் இரு நாடுகளின் ஒற்றுமையை வெளியுலகிற்கும், இந்தியா- பாகிஸ்தான் மக்களிடையே எடுத்து கூறவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

    இதற்காக நாங்கள் இரு நாட்டின் சுதந்திர தினங்களை தேர்வு செய்தோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் எங்களது வீட்டை இரு நாட்டு கொடிகளுடன் அலங்கரித்து இனிப்பு வழங்கி, இரு நாட்டு நண்பர்களுடனும் கொண்டாடி வருகிறோம். மேலும் இந்த சுதந்திர தினங்களில் வெளியே சென்று அனைவரிடமும் சகோதரத்துவத்தையும், அன்பையும் வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம். அன்புக்கு தேசம், மதம், மொழி என்று எல்லைகள் எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாகிஸ்தான் சுதந்திர தினத்தை நேற்று தங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டாடிய ரவிசங்கர், ஆர்த்தி தம்பதியர், இந்திய சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.
    Next Story
    ×