search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணி காரணமாக 2021 வரை ஓடாது
    X

    புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணி காரணமாக 2021 வரை ஓடாது

    பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் 1859-ம் ஆண்டில் மணிக்கூண்டு திறக்கப்பட்டது. பிக்பென் என்று அழைக்கப்படும் இந்த கடிகாரம் கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. உலகின் முக்கியமான வரலாற்று சின்னமான பிக்பென் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கம்.



    அதன்படி, அந்த கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதற்கென தனியாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அந்தப் பராமரிப்புக் குழு அடுத்த வாரம் முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, கடிகாரத்தின் செயல்பாடு வரும் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுவதாகவும், வரும் 2021-ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மராமத்துப் பணிகளுடன் எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் தானியங்கி லிப்ட், சமையலறை, கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்று பராமரிப்பு நிபுணர்கள் குழுவின் தலைமை கட்டட நிபுணரான ஆடம் வாட்ரோப்ஸ்கி கூறியுள்ளார்.

    பிக்பென் பழுது பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கை தெரிவிக்கிறது. நான்கு ஆண்டுகள் கடிகாரம் நிறுத்தப்பட்டாலும், ஆங்கில புத்தாண்டு தினத்தை அறிவிக்கும் விதமாக கடிகாரம் மணியடிக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னர் 1983, 1985, 2007 ஆண்டுகளில் பிக்பென் கடிகாரத்தில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றபோதும் குறுகிய காலத்துக்கு கடிகாரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×