search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவுடன் போர் இல்லை: அமெரிக்க ராணுவ மந்திரி சூசகம்
    X

    வடகொரியாவுடன் போர் இல்லை: அமெரிக்க ராணுவ மந்திரி சூசகம்

    வடகொரியாவுடன் போர் இல்லை என்பதை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், அமெரிக்காவுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க நகரங்களை குறி வைத்து தாக்குகிற ஆற்றல் வாய்ந்த 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது, இது அமெரிக்காவுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று.

    இதன் காரணமாக அமெரிக்காவின் முயற்சியால், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துகிற வகையில், அந்த நாட்டின் நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த புதிய பொருளாதார தடையால் அந்த நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த வடகொரியா மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் வருகிற குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தது.

    இதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு டெலிவிஷனில் வரைபடங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்போ, “அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டால் மிகுந்த பதற்றத்தை சந்திக்க வேண்டியது வரும். வடகொரியாவுக்கு சிக்கல் ஏற்படும்” என எச்சரித்தார்.

    இதனால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    ஆனால் இதில் திடீர் திருப்பமும் ஏற்பட்டுள்ளது. வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்பதை சூசகமாக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில், “நான் ராணுவ மந்திரி என்ற வகையில், (வடகொரியாவுடன்) மோதலுக்கு தயார் ஆவதுதான் என் வேலை. ஆனால், வெளியறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி ஆகிய இருவரும் ராஜ்ய ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

    ஆனால் ராஜ்ய ரீதியில் எடுத்து வருகிற நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

    மேலும், “போரின் சோகம், ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால் அதன் குணாதிசயங்கள் குறித்து விளக்கத் தேவையில்லை” என்று கூறினார்.

    அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் திட்டம் பற்றிய கேள்விக்கு ஜேம்ஸ் மேட்டிஸ் பதில் அளிக்கையில், “ மோதலுக்கு நாடு தயாராக இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து எதிரிக்கு முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “அமெரிக்கா எப்போதுமே பேச்சு வார்த்தையைத்தான் பரிசீலித்து வந்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டார். 
    Next Story
    ×