search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த ஆதரவு பெருகுகிறது
    X

    தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த ஆதரவு பெருகுகிறது

    வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கிடையில், தென்கொரியா தனது பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள் தயாரிக்க அந்நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

    சியோல்:

    வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளிடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை போர் நடைபெற்றது. இந்த போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த போரில் அணு ஆயுதங்களும் உபயோகிக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா, தென் கொரியாவிற்கு சில அணு ஆயுதங்களை தற்காப்புக்காக அளித்திருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 1974-ம் ஆண்டு ஒரு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அதன்படி இரு கொரிய நாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்திருந்தன. 1992-ம் ஆண்டு கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என இரு நாடுகளும் அறிவித்ததை அடுத்து தென்கொரியாவிற்கு வழங்கப்பட்டிருந்த அணு ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப்பெற்றது.

    ஆனால் உடன்படிக்கைகளை மீறி வடகொரியா கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. பின்னர் 2009-ம் ஆண்டு உடன்படிக்கைகளில் இருந்து வடகொரியா அதிகாரப்பூர்வமாக விலகியது. ஆனால் தென்கொரியா இன்னும் அந்த உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டுள்ளது. எனவே தென்கொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்த அமெரிக்கா தடையாக உள்ளது. 

    தென்கொரியாவிற்கு அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பை எளிதாக தகர்ப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கிடையே பதற்றமான சுழல் நிலவிவருகிறது.

    இந்நிலையில், தென்கொரியாவில் செயல்பட்டுவரும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்கொரியாவிற்கு அமெரிக்கா வழங்கும் அணு ஆயுத பாதுகாப்புக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அணு ஆயுதம் கொண்ட தென்கொரியாவை பார்க்க விரும்பவில்லை என்றால், தென்கொரியாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அணு ஆயுதங்கள் வழங்க வேண்டும், என கூறியுள்ளது. மேலும் வடக்கில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை கையாள தென்கொரியா தனது சொந்த பாதுகாப்புகளை நம்பி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

    தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 57 சதவிகித மக்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு ஆதரவாகவும் 31 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். தற்போது தென்கொரியா 800 கி.மீ. வரை சென்று தாக்கக்கூடிய 500 கி.கி. அளவிற்கான வெடிபொருட்களை எடுத்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை 1000 கிலோவாக உயர்த்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

    சுமார் 28,500 அமெரிக்க ராணுவத்தினர், தென்கொரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்நாடு தற்காப்பிற்காக கூட அணு ஆயுதங்கள் தயாரிக்க அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தடையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×