search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
    X

    ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

    ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.
    வாஷிங்டன்:

    ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

    பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் கூறி ஈரான் மீதும் பொருளாதார தடை விதிக்க குரல் ஓங்கியது.

    வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளுக்காக அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

    எனவே இந்த 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. விவாதத்துக்கு பின்னர் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

    குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த மசோதா அங்கு நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதாவாக 419 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.

    இந்த மசோதாவின் சிறப்பம்சம், 3 நாடுகள் மீதும் ஜனாதிபதி டிரம்ப் தண்டனையை குறைப்பதற்கான திறனை கட்டுப்படுத்தக்கூடியதாகும்.

    தற்போது இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், வடகொரியா மீது தண்டனை விதிக்க வேண்டுமா என்பதில் விவாதம் உள்ளது. செனட் சபையில் இந்த மசோதா நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாகி விடும்.

    பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறி இருப்பது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் கருத்து தெரிவிக்கையில், “வரலாற்றில் மிக கடினமான பொருளாதார தடை விதிப்பதற்கு வகை செய்யும் மசோதா இது. அமெரிக்கர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, நமது ஆபத்தான எதிரிகள் மீதான திருகுகளை இது இறுக்குகிறது” என்று கூறினார்.

    வெளியுறவு விவகாரங்கள் குழுவின் தலைவர் எட் ராய்சி கருத்து தெரிவிக்கையில், “இந்த 3 நாடுகள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ளவை. இவை அமெரிக்க நலன்களுக்கு எதிரானவை. அந்த நாடுகளுக்கு நாம் கட்டாயமான ஒரு பதிலை அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.

    செனட் சபையின் மைனாரிட்டி தலைவர் சார்லஸ் சூமர் கூறும்போது, “செனட் சபையில் இந்த மசோதாவை குடியரசு கட்சியினர் விரைவாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக விரைவில் செல்லும். இரு கட்சிகளும் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்றுவது, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தலையிட்டதற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டிய தேவையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

    பொருளாதார தடை மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறி இருப்பது குறித்து ரஷியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

    இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு துணை மந்திரி செர்கெய் ரயாப்கவ் கருத்து தெரிவிக்கையில், “ரஷியாவுடனான அமெரிக்க உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதை கெடுப்பதற்கான ஒரு மோசமான நடவடிக்கையாக இந்த மசோதா அமைந்துள்ளது” என்று கூறினார்.
    Next Story
    ×