search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் பெட்ரோலிய ஆலை தொழிலாளர்கள் ஸ்டிரைக்: சப்ளையை சீர்படுத்த ராணுவம் விரைந்தது
    X

    இலங்கையில் பெட்ரோலிய ஆலை தொழிலாளர்கள் ஸ்டிரைக்: சப்ளையை சீர்படுத்த ராணுவம் விரைந்தது

    இலங்கையில் பெட்ரோலிய தொட்டிகளை இந்தியா மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தத்தை சமாளிக்க ராணுவம் களமிறங்கியுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள திரிகோணமலை பகுதியில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறுவப்பட்ட பிரமாண்ட பெட்ரோல் தொட்டிகள் உள்ளன. மொத்தம் உள்ள 99 பெட்ரோல் தொட்டிகளில் 73 தொட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க சமீபத்தில் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது.

    இதேபோல், ஹம்பன்தோடா துறைமுகம் பகுதியில் உள்ள பெட்ரோல் தொட்டிகளை சீனாவின் நிர்வாகத்தின்கீழ் இயக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த புதிய முடிவு நாட்டு வளங்களை பிறநாடுகளுக்கு விற்பனை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

    அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு ஆலைகளின் தரத்தை மேம்படுத்தக் கோரியும் கடந்த திங்கட்கிழமை இரவில் இருந்து மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

    இதனால், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களில் உள்ள பெட்ரோல்  விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

    அரசின் முடிவில் மாற்றம் ஏற்படும்வரை பணிக்கு திரும்பப் போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு வராத தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது.



    இந்நிலையில், தடைபட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் கொல்லோன்னாவா மற்றும் முத்துராஜாவேலா பகுதிகளில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் முக்கிய பெருநகரங்களில் உள்ள பெட்ரோல்  விற்பனை நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பு இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தலைநகர் கொழும்புவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நூற்றுக்கணக்கான போலீசாரும் ராணுவ வீரர்களும் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×