search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - சீனா இடையேயான மோதலை கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் அமெரிக்கா
    X

    இந்தியா - சீனா இடையேயான மோதலை கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் அமெரிக்கா

    இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நடைபெற்றுவரும் மோதல்களை நெருக்கமாகவும், உன்னிப்பாகவும் கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. 

    சிக்கிம் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு வசதியாக, பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு படைகளும் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதே கருத்தை வெளியுறவுத்துறை அமைச்சகமும் வலியுறுத்தி இருந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனையாக, இந்தியா தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நிலவிவரும் மோதல்போக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாவெர்ட், ’எல்லைப்பகுதியில் நிலவிவரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும். 

    அதற்கு இடமளிக்கும் வகையில் இருதரப்பினரும் தங்கள் ராணுவத்தை திரும்பப்பெற்றால் மட்டுமே சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும். பீஜிங் நகரில் வரும் 27-28 தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் சீனாவின் பாதுகாப்பு துறை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்’ என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×