search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் அதிகரித்துவரும் இந்து தேசியவாதம் போருக்கு வழிவகுக்கும்: சீன ஊடகம் தகவல்
    X

    இந்தியாவில் அதிகரித்துவரும் இந்து தேசியவாதம் போருக்கு வழிவகுக்கும்: சீன ஊடகம் தகவல்

    இந்து தேசியவாதம் அதிகரிப்பு இந்தியாவின் சீனக் கொள்கையை பறித்துவிட்டதாகவும் இது போருக்கு வழிவகை செய்யும் எனவும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    பெய்ஜிங்,

    சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. 

    இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் என மிரட்டி வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா ‘ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்’ என கூறிவிட்டது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கூறிவரும் சீனா, எல்லையில் அடிக்கடி போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது என சீன தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

    சீனாவின் ஊடகங்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தேசியவாதம், அந்நாட்டின் சீன கொள்கையை பறித்துவிட்டது எனவும், இது போருக்கு வழிவகை செய்யும் எனவும் சீனாவின் அரசு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் சீன மீடியா எச்சரித்து உள்ளது. 

    எப்போதும் போல இந்தியா பலவீனமானது என்பது போன்றும், சீனா வலிமையானது என பாராட்டுவது போன்றும், இந்திய அரசியல்வாதிகள் அதை உணர்ந்து கொள்ளாதது போன்று தன்னுடைய பழைய பாட்டையே சீன மீடியா இப்போதும் பாடி வருகிறது.  

    இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து தேசப்பற்றாளர்களின் வன்முறையை தடுக்க தவறிவிட்டது என்ற புது கதையையும் சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் முதல் முறையாக தன்னுடைய கட்டுரையில் இணைத்து உள்ளது. 

    இந்து தேசியவாதத்துக்கு தீனி போடவே இப்போதைய மோதல் திட்டம் எனவும் எழுதி உள்ளது. மோடி அரசு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வலுவான அரசியல் எதிர்ப்பு கொள்கைகளை கடைபிடித்து வருகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளது.
    Next Story
    ×