search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப் - விளாடிமிர் புதின் ரகசியமாக பேசியது உண்மைதான்: வெள்ளை மாளிகை
    X

    டொனால்டு டிரம்ப் - விளாடிமிர் புதின் ரகசியமாக பேசியது உண்மைதான்: வெள்ளை மாளிகை

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் ரகசியமாக சந்தித்துப் பேசியது உண்மைதான் என வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக டிரம்ப் பிரச்சாரக் குழுவும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

    ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டிரம்பும் புதினும் கடந்த 7-ம் தேதி சுமார் 2 மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதே நாளில் இரவு விருந்தின்போது இரு ஜனாதிபதிகளும் 2-வது முறையாக சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    விருந்தின் போது தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற டிரம்ப், புதினின் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து அவருடன் பேசியுள்ளார். அதே நேரம் புதினின் மொழி பெயர்ப்பாளர் மட்டும் அங்கு இருந்துள்ளார் என அவர் கூறினார்.

    ‘டிரம்பும் புதினும் 2-வது முறையாக சந்தித்துப் பேசவில்லை. இரவு விருந்து முடியும் போது இருவரும் சுருக்கமாக பேசினர். இந்தச் சந்திப்பை மறைத்துவிட்டதாகக் கூறுவது தவறு’ என மற்றொரு அதிகாரி கூறுகிறார்.

    ரகசியமாக பேசியதாக வெளியான செய்தி போலியானது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை மற்றும் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
    Next Story
    ×