search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூர்க்காலாந்து நிர்வாக உடன்படிக்கையை தீயிட்டு கொளுத்தி போராட்டக்காரர்கள் அமளி
    X

    கூர்க்காலாந்து நிர்வாக உடன்படிக்கையை தீயிட்டு கொளுத்தி போராட்டக்காரர்கள் அமளி

    மேற்கு வங்காளம் மாநில அரசால் உருவாக்கப்பட்ட கூர்க்காலாந்து நிர்வாக உடன்படிக்கையை தீயிட்டு கொளுத்தி இன்று போராட்டக்காரர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கும் எங்களுக்கும் இடையே ஒட்டுறவு ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
    டார்ஜிலிங்:

    மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்க்காலாந்து எனும் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது அவர்கள் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடும்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை வங்கமொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூர்க்காலாந்து விவகாரம் மீண்டும் வெடித்தது.

    கடந்த 12-ம் தேதியில் இருந்து கூர்க்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து, அப்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 15 நாட்களாக நடைபெற்றுவரும் கூர்க்காலாந்து போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திண்டாடி வருகிறது. இதுவரை போராட்டக்காரர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், டார்ஜிலிங் மலைப்பகுதியை ஒட்டி கூர்க்கா இன மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநில அரசு முன்னர் செய்துகொண்ட உடன்படிக்கையை இன்று போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி அமளியில் ஈடுபட்டனர்.



    டார்ஜிலிங் நகரில் உள்ள சவ்ரஸ்ட்டா பகுதியில் இன்று மேலாடை இல்லாமல் குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தங்களது முதுகில் டியூப்லைட்டுகளை அடித்து, உடைத்து அரசை எதிர்த்து ஆவேசமாக கூச்சலிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறினர்.

    கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வாழும் பகுதிக்கு தன்னாட்சி உரிமம் வழங்குவதாக கூறி ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எரித்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்துக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இன்றிலிருந்து மேற்கு வங்காளம் மாநில அரசுக்கும் எங்களுக்கும் இருந்த உறவு அறுந்து விட்டது. இனி அரசுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    Next Story
    ×