search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தார் - அரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா அறிவுரை
    X

    கத்தார் - அரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா அறிவுரை

    சவுதி அரேபியா, எகிப்து உள்பட 4 நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுப்பு தெரிவித்து இருந்தநிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அரபு நாடான கத்தாருக்கும், அதையொட்டி உள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகியவை கத்தாருக்கு பொருளாதார தடை விதித்துள்ளன.

    தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஈரான் நாட்டுடன் அதிக நட்புறவு வைத்துள்ளதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்தனர்.

    இதனால் கத்தார் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து 4 நாடுகளும் 13 நிபந்தனைகளை கத்தாருக்கு விதித்தன. அதில், ஈரானுடன் உள்ள தொடர்பை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்-ஜசீரா டி.வி. ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் அந்த நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அமெரிக்கா இரு தரப்பினரையும் சமரசப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாவது:-



    கத்தாருக்கு 4 நாடுகளும் விதித்துள்ள நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத ஒன்றாக உள்ளது. எனவே நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

    தீவிரவாதிகளை ஒடுக்குவது போன்ற வி‌ஷயங்களில் அந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும். இதற்காக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக செல்ல வேண்டும். மோதல் போக்கை வளரவிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியான்ஸ்பைசர் கூறும்போது, இந்த நாடுகளுக்குள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குடும்ப சண்டை போன்றது. அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
    Next Story
    ×