search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூதி இடிக்கப்பட்டுள்ளதை விமானம் மூலம் படம் பிடித்துள்ள காட்சி.
    X
    மசூதி இடிக்கப்பட்டுள்ளதை விமானம் மூலம் படம் பிடித்துள்ள காட்சி.

    மொசூல் நகரில் மிக பழமையான மசூதியை இடித்து தரைமட்டமாக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம்

    ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மொசூல்:

    ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் ராக்கா நகரம் உள்ளிட்ட பகு திகளையும், ஈராக்கில் மொசூல் நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை ராணுவம் ஏற்கனவே மீட்டு விட்டது. கடைசியாக அவர்களிடம் இருந்த மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் போர் தொடுத்தது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நகரை மீட்டு விடுவோம் என்று அறிவித்து இருந்தனர். ஆனால், 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் முழுமையாக மொசூல் நகரை மீட்க முடியவில்லை.

    அங்குள்ள டைக்ரீஸ் நதிக்கு கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

    மேற்கு பகுதியில் ஒரு சில இடங்கள் மட்டும் ராணுவம் வசம் இருக்கிறது. மற்ற இடங்களை இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். அவற்றை கைப்பற்றுவதற்காக ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

    மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இடத்தில் அல் நூரி என்ற பழமை வாய்ந்த மசூதி இருந்தது. இது 1172-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த மசூதி ஈராக்கின் முக்கிய அடையாள சின்னமாகவும் இருந்து வந்தது.

    அல் நூரி மசூதியின் பழைய படம்.

    இதில், ஹட்பா எனும் புகழ்பெற்ற சாய்வு கோபுரமும், மேலும் பல்வேறு கோபுரங்களும் இருந்தன. மிகப்பிரமாண்ட வளாகத்தில் மசூதி அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த மசூதியை தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நகரை பிடித்த போது, இந்த மசூதியில் இருந்துதான் அதன் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி தனது இயக்கம் பிடித்து வைத்துள்ள இடங்களுக்கு இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டார்.
    Next Story
    ×