search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய்: 21-வது சர்வதேச குர்ஆன் போட்டிகளின் நிறைவு விழா - வங்காளதேச சிறுவனுக்கு முதல் பரிசு
    X

    துபாய்: 21-வது சர்வதேச குர்ஆன் போட்டிகளின் நிறைவு விழா - வங்காளதேச சிறுவனுக்கு முதல் பரிசு

    துபாய் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் குரான் மனனப் போட்டியில் வங்காளதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் முதல் பரிசை தட்டிச் சென்றான்.
    துபாய்:

    துபாயில் நடைபெற்ற 21-ம் சர்வதேச திருக்குர்ஆன் உலகளாவியப் போட்டிகளின் விருது நிகழ்வின் நிறைவு நாளில் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளையின் (Knowledge Foundation) தலைவரான ஷேக் அஹ்மது பின் முஹம்மது பின் ராஷித் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

    திருக்குர்ஆன் மனனப் போட்டியில் தவறில்லாமல் ஓதி வெற்றி்பெற்ற முதல் பத்து போட்டியாளர்களுக்கான பரிசுகளையும் மந்திரி ஷேக் அஹ்மது வழங்கி கவுரவித்தார்.



    வங்காளதேசத்தைச் சேர்ந்த முஹ்மது தாரிக்குல் இஸ்லாம்(13) முதல் பரிசான இரண்டரை லட்சம் திர்ஹம்களைப் பெற்றான். இரண்டாம் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸைஃபா சித்தீக்கிக்கும் கிடைத்தன (இவருக்குத்தான் குர்ஆன் இசைப்புப் போட்டிக்கான முதல் பரிசும் கிடைத்தது).

    மூன்றாம் பரிசு காம்பியாவைச் சேர்ந்த மொதவ் ஜோப், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அலோபைதன் அஹ்மது அப்துல் அஜீஸ், துருக்கியைச் சேர்ந்த ராஷித் அல்லானி ஆகிய மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.



    பஹ்ரைனைச் சேர்ந்த முஹானா அஹ்மதுக்கு ஆறாவது பரிசும், லிபியாவைச் சேர்ந்த முகமது அல்ஹாதி அல்பஷீர் நஜியா மற்றும் குவைத்தைச் சேர்ந்த ஒமர் அல்ரெஃபாய் ஆகியோருக்கு ஏழாவது பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒன்பதாவது பரிசு மூரித்தானியாவைச் சேர்ந்த முஹம்மது அபெக்காவிற்கு வழங்கப்பட்டது.

    ருவாண்டாவைச் சேர்ந்த ஹபிமானா மக்கீனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த முகமது நஜெப் கடோ ஆகிய இருவரும் பத்தாம் இடத்திற்கும் தேர்வாகினர்.



    இந்நிகழ்ச்சியில், சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான உயர் பரிசு சவூதியில் உள்ள இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மானுக்கு வழங்கப்பட்டது.

    மாமன்னரின் சார்பாக சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ் இந்தப் பரிசினைப் பெற்றுகொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ், இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் இந்த ஆண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமை மட்டுமல்ல.



    கடந்த மற்றும் எதிர்வரும் அனைத்து ஆண்டுகளுக்குமான ஒட்டுமொத்த இஸ்லாமிய ஆளுமை என்று புகழாரம் சூட்டினார்.

    மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையான பத்து லட்சம் திர்ஹம் பணத்தையும் உலகளாவிய குர்ஆன் ஆய்வு மையங்களுக்குத் தனது பங்களிப்பாக மாமன்னர் தந்துவிட்டதாகவும் அறிவித்தார்.

    அமைப்புக் குழுவின் தலைவர் - கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகர் இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா பேசுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக நடந்துவரும் இந்த உலகளாவியப் போட்டி திருக்குர்ஆனை மனனம் செய்து ஓதுபவர்களையும் அவர்களைப் பயிற்றுவிப்பவர்களையும் ஊக்கவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.



    குர்ஆனை மனனம் செய்யும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்குச் சர்வதேச அளவிலான இவ்விருது உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது. இப்போட்டியில் பங்குபெற்ற ஒவ்வொருவரும் இறைவனின் அருளைப் பெற்ற வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றதை சுட்டிக்காட்டி அவர்களுக்கும் அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் ஸயீத் அல் நஹ்யானுக்கும் நன்றி தெரிவித்தார்.

    இப்போட்டி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த புரவலர்களுக்கும், நிகழ்வுகளை உடனுக்குடன் சிறந்த வகையில் செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×