search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் புதிய போராட்டத்தை தொடங்கும் மாதேசி கட்சிகள்: 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் பாதிக்குமா?
    X

    நேபாளத்தில் புதிய போராட்டத்தை தொடங்கும் மாதேசி கட்சிகள்: 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் பாதிக்குமா?

    நேபாளத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், தேர்தலுக்கு எதிராக புதிய போராட்டத்தை தொடங்க மாதேசி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மே 14-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மாதேசி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நடந்த இந்த தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இந்த தேர்தலுக்கு மாதேசி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாகாண எல்லை தொடர்பான மறுவரையறை உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

    அதேசமயம், மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும் என பிரதமர் பிரசண்டா தெரிவித்திருந்தார். மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் தொடர்பான மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. மாதேசி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தேராய் பிராந்தியத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாதேசி சார்ந்த 7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவான ‘நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி’ இன்று முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது.

    குறிப்பாக மனுத் தாக்கல் நடைபெற உள்ள ஜூன் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தெற்கு நேபாளத்தில் உள்ள 22 மாவட்டங்களில் தீப்பந்த பேரணிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

    மாதேசி தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறப்படவில்லை என்றும், தெற்கு சமவெளிகளில் உள்ளாட்சி அமைப்புகளை அதிகரித்தது போதாது என்றும் இந்த கூட்டணி கூறிவருகிறது. இதுதவிர தெராய் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த அமைப்பு தேர்தலை புறக்கணிக்கும் அதேசமயம், மாதேசி சமூகத்தினரின் இரண்டு முக்கிய கட்சிகள் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×