search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிப்து நாட்டில் கிறிஸ்தவர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- 23 பேர் பலி
    X

    எகிப்து நாட்டில் கிறிஸ்தவர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- 23 பேர் பலி

    எகிப்து நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கெய்ரோ:

    செழுமையான நைல் நதி பாயும் வரலாற்று தொன்மைமிக்க எகிப்து நாட்டில் மிகவும் பழமையான பாரம்பரிய இனத்தவர்களான ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நவநாகரிக காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவியர்களின் வாழ்க்கை முறைக்கும் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களின் வாழ்க்கை நெறிக்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு.

    இந்நிலையில், எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்யா பகுதியில் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களின் அன்பா சாமுவேல் குருகுலம் அமைந்துள்ளது. இந்த குருகுலத்துக்கு சில கிறிஸ்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


    எனினும், ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களுக்கு எதிராக சமீபகாலமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இங்குள்ள அலெக்ஸாண்டிரியா மற்றும் டான்ட்டா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.

    எனவே, இன்று 23 உயிர்களை பலிவாங்கிய தாக்குதலையும் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள்தான் நடத்தி இருக்க வேண்டும் என கருதப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
    Next Story
    ×