search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளுடன் கடும் போர்: ராணுவ ஆட்சி அமல்
    X

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளுடன் கடும் போர்: ராணுவ ஆட்சி அமல்

    பிலிப்பைன்ஸ் நாட்டில் அபு சய்யாப் தீவிரவாத குழுவினரை வேட்டையாடும்போது வெடித்த ஆயுதப் போரை தொடர்ந்து சுமார் 2 லட்சம் மக்கள் வாழும் மாராவி நகரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவிட்டுள்ளார்.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினர் இயங்கி வருகின்றனர். புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து பரவலாக வாழும் இந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்த ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கடத்தி செல்லும் அபு சய்யாப் தீவிரவாதிகள், பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு பலரை விடுவிக்கின்றனர்.

    பிணைத் தொகை கிடைக்காத நிலையில், பிடித்து சென்றவர்களின் தலையை வெட்டி, ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இவர்களை வேட்டையாடி அடிக்குமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் அபு சய்யாப் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்டானோ தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மாராவி நகரில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்பகுதியை தலைமையிடமாக தக்க வைத்துக் கொண்டு அபு சய்யாப் தீவிரவாதிகள் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் ராணுவ படையினர் நேற்று மாலை மாராவி நகரை சுற்றி வளைத்தனர்.

    அபு சய்யாப் தீவிரவாதிகளை பதுங்கும் இடங்களில் இருந்து வெளியேற்ற கடுமையான தாக்குதலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ்காரர் மற்றும் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் நேற்று இரவு வெளியாகின.

    பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே

    பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே தற்போது ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பான செய்தி கிடைத்ததும், தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு தலைநகர் மணிலாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், மாராவி நகரில் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. உயிர் பயத்தில் அங்குள்ள மக்கள் அனைவரும் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளே முடங்கி கிடக்கின்றனர். இதையடுத்து நாட்டின் தென் பகுதியான மின்டானாவோ தீவுக்கூட்டம் முழுவதும் ராணுவ ஆட்சியை அமல்படுத்த அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே அதரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதிபரின் இந்த உத்தரவு உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 10.00 மணிக்கு வெளியானது. இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதலாக ஆயுதங்களும், ராணுவ வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்த உத்தரவு வெளியான பின்னர் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோட்ரிகோ டுட்டெர்ட்டே, அல் சய்யாப் தீவிரவாதிகளை முழுமையாக வேட்டையாடும் பணி ஒரு ஆண்டு வரை நீடிக்கலாம் அல்லது ஒரு மாதத்திற்குள் கூட முடிந்து விடலாம். அதுவரை மின்டானாவோ மக்கள் ராணுவ ஆட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×