search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர் - அமெரிக்க விஞ்ஞானிகள் அளித்த கவுரவம்
    X

    புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர் - அமெரிக்க விஞ்ஞானிகள் அளித்த கவுரவம்

    சர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு ‘நாசா’வின் விஞ்ஞானிகள், முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை சூட்டி கவுரவித்துள்ளனர்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (பில்ட்டர்களில்) ஒருவிதமான புதிய உயிரினத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் முக்கிய ஆய்வுக்கூடமான ‘ஜெட் புரோலிபியன் லேபரட்டரி’யின் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவத்திலானது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகின்றன என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

    இந்த உயிரினத்துக்கு ‘நாசா’வின் விஞ்ஞானிகள், இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை சூட்டி கவுரவித்துள்ளனர்.

    இந்த உயிரினத்துக்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சொலிபாசில்லஸ் கலாமி’ என்பதாகும்.

    இதுபற்றி ‘ஜெட் புரோலிபியன் லேபரட்டரி’யின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறும்போது, “புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியாவுக்கு சொலிபாசில்லஸ் கலாமி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாவின் பேரினம், சொலிபாசில்லஸ் ஆகும். நானும் ஒரு தமிழன் என்ற முறையில் டாக்டர் கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை அறிவேன்” என்றார்.

    அப்துல் கலாம் 1963-ம் ஆண்டு, ‘நாசா’வில் பயிற்சி பெற்றதும், அங்கு பயிற்சி பெற்று வந்த பின்னர்தான் அவர் நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×