search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவு சிறப்பு செயலாளரை நீக்க நவாஸ் ஷெரீப் முடிவு: ராணுவம் நிராகரிப்பு
    X

    பாகிஸ்தான் வெளியுறவு சிறப்பு செயலாளரை நீக்க நவாஸ் ஷெரீப் முடிவு: ராணுவம் நிராகரிப்பு

    பாகிஸ்தானில் ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிட்டது தொடர்பாக, தனது நம்பிக்கைக்குரிய வெளியுறவு சிறப்பு செயலாளரை நீக்குவதற்கு பிரதமர் நவஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். இதனை ராணுவம் நிராகரித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இது ஊடகங்களுக்கு தெரிந்து, செய்தி வெளியானது.

    மிகவும் ரகசியமாக நடந்த இந்த கூட்டத்தின் விவரங்களை வெளியில் கசியவிட்டதற்கு பொறுப்பேற்று, தகவல் தொடர்புத்துறை மந்திரி பதவி விலக நேரிட்டது. மேலும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    அதில், ஊடகத்திற்கு தகவல் கசிய விட்டதில், வெளியுறவுத்துறை சிறப்பு செயலாளர் தாரிக் பதேமி குற்றவாளி என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தாரிக் பதேமியை பதவி நீக்கம் செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

    ஆனால், இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இதனை ராணுவம் நிராகரித்துள்ளது. மேலும், இது முழுமைபெறாத நடவடிக்கை என்றும், விசாரணைக் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
    Next Story
    ×