search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா
    X

    வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டிருக்கிறது. இது, இரு நாடுகளுக்கிடையிலான பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் வடகொரியா இன்று ஒரு மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. வடகொரிய இணையதளத்தில் வெளியான அந்த வீடியோவில், அண்மையில் கொரிய திபகற்பத்திற்கு அமெரிக்கா அனுப்பிய யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கி கப்பல் மீது  தாக்குதல் நடத்துவது போன்றும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்துவது போன்றும், இதனால் வெள்ளை மாளிகை வெடித்துச் சிதறுவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சில அனிமேஷன்களும் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை தொடர்பான காட்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த மிரட்டல் வீடியோ, இரு நாடுகளுக்கிடையிலான பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
    Next Story
    ×