search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு கவனுக்கு நாங்கள் பணம் தர முடியாது: தென் கொரியா திட்டவட்டம்
    X

    அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு கவனுக்கு நாங்கள் பணம் தர முடியாது: தென் கொரியா திட்டவட்டம்

    எங்கள் நாட்டில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு அவர்கள் கேட்பதுபோல் 100 கோடி டாலர் பணத்தை நாங்கள் தர முடியாது என தென் கொரியா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    சியோல்:

    தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளது.

    முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து (Terminal High Altitude Area Defence (THAAD) system) என்ற ஏவுகணை எதிர்ப்பு கவன் ஒன்றை வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டு எல்லைப்பகுதியில் அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.

    சமீபத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் தென் கொரியாவில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு கவன் நிறுவும் பணிகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த கவனுக்கான பாகங்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்தனர். 

    அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் இருந்து ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கான பாகங்கள் தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓசான் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை கடந்த 25-ம் தேதி வந்தடைந்தது.

    இன்னும் ஒருசில நாட்களில் இந்த கவன் நிர்மாணிக்கப்படும். அதன் பின்னர் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தனது கிடுக்கிப்பிடி நடவடிக்கையின் மூலம் ‘செக்’ வைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

    இதற்கிடையில், இந்த ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கான விலை மற்றும் தென் கொரியாவில் இதை நிர்மாணம் செய்யும் பணிக்கான செலவினங்களை அமெரிக்கா ஏற்று கொள்ளும் என முன்னாள் அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்த கவன் அமைப்பதற்கான மொத்த செலவினங்களையும் தென் கொரியா அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ‘அமெரிக்கா - தென் கொரியா இடையில் கடந்த ஐந்தாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த ‘வர்த்தக தாராளமயம்’ என்ற கொள்கையை இனியும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. முந்தைய ஆட்சிக் காலத்தின்போது கடந்த 2011-ம் ஆண்டில் (முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி) ஹிலாரி கிளிண்டனால் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கு முன்னர் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நாம் அனுமதிக்க முடியாது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, வட கொரியாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தென் கொரியா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு அமெரிக்க அரசு எதற்காக சுமார் 100 கோடி டாலர்கள் அளவிலான பணத்தை செலவழிக்க வேண்டும்? 

    எனவே, எதிரியின் ஏவுகணைகளை வான்வெளியில் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் படைத்த இந்த கவனுக்கான விலையை அமெரிக்காவுக்கு தென் கொரியா அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் நான் தெரிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுதொடர்பாக, இன்று பதிலளித்துள்ள தென் கொரியா நாட்டு ராணுவ அமைச்சகம், எங்கள் நாட்டில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு டொனால்ட் டிரம்ப் கேட்பதுபோல் 100 கோடி டாலர் பணத்தை நாங்கள் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

    அமெரிக்காவுடன் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை தடுப்பு கவன் அமைப்பதற்கான இடத்தையும் தேவையான வசதிகளையும் மட்டும் நாங்கள் செய்து கொடுக்க வேண்டும். அதை நிர்மாணிப்பது, நிர்வகிப்பது, பராமரிப்பது போன்றவை அமெரிக்க அரசின் பொறுப்பாகும் என தென் கொரியா நாட்டு ராணுவ அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×