search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிச்சரிவில் சிக்கி 47 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட இளைஞர் - உடன் வந்த தோழியை பறிகொடுத்த சோகம்
    X

    பனிச்சரிவில் சிக்கி 47 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட இளைஞர் - உடன் வந்த தோழியை பறிகொடுத்த சோகம்

    நேபாளம் நாட்டில் உப்பை தின்று, தண்ணீர் குடித்து 47 நாட்களாக பனிச்சரிவில் சிக்கியிருந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
    காத்மண்டு:

    நேபாளம் நாட்டில் உள்ள இமைய மலைப்பகுதியில் பல்வேறு சிகரங்கள் உள்ளன. இந்தச் சிகரங்களில் உலகமெங்கிலும் இருந்து வரும் மலையேற்ற குழுவினர் ஏறி பயிற்சி பெறுவதுண்டு. சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஆவலில் அதிகம் பேர் இந்த சிகரங்களில் பல நாட்களாக தங்கியிருந்து மலையேறுவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு ஆகும்.



    தைவான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான லியாங் ஷெங் யுயே மற்றும் அவரது 19 வயது தோழி லியு சென் சுன் ஆகிய இருவரும் கடந்த மாத தொடக்கத்தில் கனேஷ் ஹிமால் என்ற சிகரத்தில் நீண்ட மலையேற்ற பயணத்தை திட்டமிட்டு, அதற்கு தேவையான உணவு, தங்கும் கொட்டகை ஆகியவற்றுடன் பயணத்தை தொடங்கினர். அதிக மக்கள் வசிக்காத பகுதியான அந்த சிகரத்தில் உள்ள ஒரு நதியின் வழியே மலையேறிக்கொண்டிருந்த ஜோடிகள் இருவரும் இயற்கையை ரசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

    மார்ச் மாதத்தின் இறுதியில் அந்த சிகரத்தில் வீசிய  பனிப்புயல் மற்றும் மாறுபட்ட சூழலினால் லியாங்கின் பயணம் திசை மாறிச்சென்றது. 8520அடி உயர சிகரத்தில் கடும் பனிச்சரிவினுள் சிக்கிக் கொண்ட ஜோடி வழி தெரியாமலும், மற்றவர்களின் உதவி கிடைக்காமலும் பரிதவித்து வந்துள்ளனர். கைவசம் வைத்திருந்த உணவு இரு வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால், தாங்கள் கொண்டு வந்திருந்த உப்பை தின்று அருகிலுள்ள நதியிலிருந்து தண்ணிரை குடித்து கொட்டகையில் உயிர் வாழ்ந்துள்ளனர்.



    நீண்ட நாட்களாக இவர்களிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்காததால், இவர்களது பயணத்தை திட்டமிட்டு கொடுத்த ஆசிய மலையேற்ற அமைப்பினர் ஹெலிகாப்டர் மூலம் தேடத் தொடங்கினர். ஆனால், மோசமான வானிலை காரணமாக தேடுதல் வேட்டையும் தடைபட்டது.

    இந்நிலையில், நேற்று அந்த சிகரத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சியின் அருகில் லியாங் மற்றும் லியு ஆகியோரை கண்டறிந்த மீட்புக் குழுவினர், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக லியாங்கின் தோழி லியு சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.

    போதிய உணவு இல்லாமல் மூன்று நாட்களுக்கு முன்னர் லியு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது சடலத்துடன் மூன்று நாட்களாக லியாங் செய்வதறியாது திகைத்து வந்துள்ளார். லியாங் மற்றும் லியு சடலத்தை மீட்டு தலைநகர் காத்மண்டு வந்து சேர்ந்த மீட்புக் குழுவினர், லியாங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    30 கிலோ எடை குறைந்த நிலையில், கால் பாதங்கள் புழுக்கள் அரித்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக தோழியை பறிகொடுத்துவிட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லியாங் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×