search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் சுகாதாரத்துறை தலைவராக இருந்த இந்திய வம்சாவளி டாக்டர் பதவி நீக்கம்
    X

    அமெரிக்காவின் சுகாதாரத்துறை தலைவராக இருந்த இந்திய வம்சாவளி டாக்டர் பதவி நீக்கம்

    ஒபாமா ஆட்சியின்போது அமெரிக்காவின் தலைமை சர்ஜனாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி டாக்டரான விவேக் மூர்த்தியை பதவியில் இருந்து நீக்கி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளை நியமித்து வருகிறார்.

    அவ்வகையில், ஒபாமா ஆட்சியின்போது அமெரிக்காவின் தலைமை சர்ஜனாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி டாக்டரான விவேக் மூர்த்தியை உடனடியாக பதவி விலகுமாறு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ‘அமெரிக்காவின் தலைமை சர்ஜனாகவும் சுகாதாரத்துறையின் தலைவராகவும் இருந்துவரும் விவேக் மூர்த்தி அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



    தற்போது 39 வயதாகும் மூர்த்தி, பராக் ஒபாமா தலைமையிலான முந்தையை ஆட்சிக் காலத்தின்போது கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் 19-வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை ஏற்ற முதல் அமெரிக்க இந்தியர் ஆவார்.

    இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோர் இங்கிலாந்தில் வாழ்ந்துவந்தபோது பிறந்த மூர்த்தி, பின்னர் மூன்று வயது சிறுவனாக இருந்தபோது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பெற்றோருடன் குடியேறினார். அமெரிக்க குடியுரிமை பெற்ற பின்னர் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.டி. மற்றும் யேல் நிர்வாகவியல் கல்லூரியில் எம்.பி.ஏ. ஆகிய பட்டங்களை பெற்று தற்போது பாஸ்டன் நகரில் உள்ள மகளிர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது இந்திய அமெரிக்கர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஒபாமாவால் நியூயார்க் மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞராக பொறுப்பு வகித்துவந்த பிரீத் பஹாராவை அதிரடியாக பதவி நீக்கம் செய்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×