search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வீடன் தேர்தலை அச்சுறுத்தும் வெளிநாட்டு சக்திகள்: பிரதமர் பகீர் தகவல்
    X

    ஸ்வீடன் தேர்தலை அச்சுறுத்தும் வெளிநாட்டு சக்திகள்: பிரதமர் பகீர் தகவல்

    ஸ்வீடனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சிக்கலாம் என்றும் இது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பிரதமர் ஸ்டீபன் லோபன் தெரிவித்துள்ளார்.
    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடன் நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் ஸ்டீபன் லோபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை குறிவைத்து, வெளிநாட்டு சக்திகள் சைபர் தாக்குதலை நடத்தி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சைபர் தாக்குதலை முறியடிக்கும் வகையில் ஸ்வீடனில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.

    எனவே, சைபர் பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படும். இதற்காக 1.12 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும். ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பினர், தேர்தல் தொடர்பான பணிகளில் அதிக அளவு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்வீடனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடு எது என்பதை புலனாய்வு அமைப்பு வெளியிடவில்லை. ஆனால், ஸ்வீடன் பாதுகாப்புக்கு ரஷ்யா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கருதுகிறது.

    இதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்ப்புக்கு ரஷ்யா உதவி செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சைபர் தாக்குதல் குறித்து உஷார் படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×