search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசிய காட்சி.
    X
    ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசிய காட்சி.

    இலங்கை போர்க்குற்ற விசாரணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப அன்புமணி வலியுறுத்தல்

    இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை பேரவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
    ஜெனீவா:

    ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34-வது கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் முன்னாள் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும், அதன்பின் 8 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

    இலங்கை அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு போதுமானவையாக இல்லை என்றும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கவலையளிக்கும் அளவுக்கு மெதுவாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இலங்கையில் நடைபெற்று வரும் விசாரணை நடைமுறை மீதான கண்காணிப்பை ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூடுதல் உத்வேகத்துடன் தொடர வேண்டியது அவசியமாகும்.

    இலங்கைப் போரின் போதும், அதற்குப் பிறகும் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சிறப்பு கலப்பின நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதில் பன்னாட்டு நீதித்துறையினரை ஈடுபடுத்த வேண்டும் என்பதை ஆணையரின் அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் போது, அதற்கு காரணமான ராணுவத்தினரை பலவீனமான, இன உணர்ச்சியூட்டப்பட்ட விசாரணை அமைப்பு தண்டிக்காது. கடந்த வாரம் கூட, 1997-ம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 10 இலங்கை படைவீரர்கள் தலைமை வழக்கறிஞரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.

    சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, அண்டை நாட்டு மக்களையும் படுகொலை செய்யும் அளவுக்கு இலங்கை துணிச்சலைப் பெற்றிருக்கிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற தமிழக மீனவரை இலங்கைப் படையினர் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

    கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்திருப்பதும், அந்தக் கொடுமை இன்னும் தொடர்வதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில், இலங்கை போர்க்குற்ற விசாரணையில் பன்னாட்டு தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அதிபரும், பிரதமரும் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர்.

    இந்தக் கீழ்படியாமையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இலங்கை போர்க்குற்ற விசாரணையை ஐ.நா பொது அவை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை அனுப்ப வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு வலிமையாக பரிந்துரைக்கிறது.

    ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தும் உரிமையையும், அதன் ஒரு கட்டமாக பொதுவாக்கெடுப்பின் மூலம் இப்பிரச்சினைக்கு நிலையானத் தீர்வு காண்பதற்கான உரிமையையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் பன்னாட்டு சமுதாயம் மதிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
    Next Story
    ×