search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேறியது
    X

    ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேறியது

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஓட்டெடுப்பு இன்றி நிறைவேறியது.
    ஜெனீவா:

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஓட்டெடுப்பு இன்றி நிறைவேறியது.

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறி போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் வற்புறுத்தின. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இலங்கை, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்காமல் தாங்களே விசாரணை நடத்தப்போவதாக கூறியது.

    இந்த நிலையில், சர்வதேச விசாரணையை நிறைவேற்ற மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கும் வகையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து, மான்டனெக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தம் தந்து வரும் நிலையில், இலங்கைக்கு சாதகமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியாவும் பிற நாடுகளும் எதிர்க்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச அளவிலான பல்வேறு தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வந்தன.

    இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வகை செய்யும் இந்த தீர்மானம் நேற்று ஓட்டெடுப்பு எதுவும் இன்றி நிறைவேறியது. மொத்தம் 40 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தீர்மானத்துக்கு கானா நாடு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 
    Next Story
    ×