search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி இருக்க கூடாது: டிரம்ப் கருத்து
    X

    ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி இருக்க கூடாது: டிரம்ப் கருத்து

    ஈராக்கின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாக காலூன்ற அனுமதிக்கும் வகையில் அமெரிக்க படைகள் வெளியேறி இருக்க கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த மோசூல் நகரை மீட்பதற்காக நடைபெற்று வரும் உச்சகட்டப் போரால் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் பயத்தில் பீதி அடைந்துள்ளனர்.

    இந்தப் போரில் தற்போது ஈராக் அரசுப் படைகளின் கை மேலோங்கி வரும் நிலையில் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாக காலூன்ற அனுமதிக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கிருந்து முன்னர் வெளியேறி இருக்க கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

    அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு வந்துள்ள ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாட்டு நட்புறவு மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட ஈராக் அரசுக்கு அமெரிக்கா செய்ய வேண்டிய ராணுவ ரீதியான உதவிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.



    பின்னர், ஹைடர் அல்-அபாடியுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், ‘தற்போது மோசூல் நழுவிப் போவதை என்னால் உணர முடிகிறது. ஆனால், அங்கிருந்து நாம் (அமெரிக்க படைகள்) வெளியேறும் வரை அந்நகரம் நம்முடையதாக இருந்தது.

    அநேகமாக, நாம் இந்த (ஈராக்) விவகாரத்தில் தலையிட்டிருக்க கூடாது. தலையிட்ட பின்னர் இதில் இருந்து நிச்சயமாக நாம் விலகி வெளியேறி இருக்கவே கூடாது. நாம் வெளியேறி பின்னர்தான் அங்கு வெற்றிடம் உருவானது. அதன் பின்னர் நடந்தது, நடந்து கொண்டிருப்பது தொடர்பாகதான் ஈராக் பிரதமரும் நானும் ஆலோசனை நடத்தினோம்.

    ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையும் தற்போதைய நிலையும் (அங்கு) வேறு மாதிரியாக உள்ளன. நாங்கள் இங்கு ஆட்சி பொறுப்பேற்று குறுகிய காலம்தான் ஆகிறது, ஆனால், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பெரிய மாற்றத்தை காண முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.

    ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து நாம் விடுபடப் போகிறோம். இது நடக்கும். தற்போதும் நடந்து வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

    Next Story
    ×