search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் ஓரம் மூடப்பட்ட எல்லைகளை திறக்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
    X

    ஆப்கானிஸ்தான் ஓரம் மூடப்பட்ட எல்லைகளை திறக்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஓரத்தில் மூடப்பட்ட டோர்காம் மற்றும் சமான் எல்லைப்பகுதியை உடனடியாக திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று உத்தரவிட்டுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லையோர பகுதிகளில் ஜமாத் உத் அஹ்ரர் என்னும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரில் உள்ள 2 வழிபாட்டுத் தலங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 76 பேரின் பட்டியலை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானிடம் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் ஜமாத் உத் அஹ்ரர் இயக்கத்தின் முக்கிய தளபதி அடில் பாச்சா உள்பட பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து, காபுலில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரியை வரவழைத்து, எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால், தங்கள் நாட்டில் தீவிரவாதம் பெருக மறைமுகமாக உதவிசெய்து வரும் ஆப்கானிஸ்தான் அரசு தங்கள் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.


    எல்லைப் பகுதியில் ஏராளமான நவீன ரக ஆயுதங்களையும் ராணுவ வீரர்களையும் பாகிஸ்தான் குவித்து வைத்தது. எல்லைப்பகுதியில் அதிகரித்துவரும் தீவிரவாதிகளின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அங்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையிலான டோர்காம் மற்றும் சமான் எல்லைப்பகுதியை மூடுமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

    மேற்கண்ட இரு எல்லைகளும் மூடப்பட்டதால் பாகிஸ்தானின் குவெட்டா நகரை ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியுடன் இணைக்கும் முக்கிய சாலை மற்றும் பாகிஸ்தானின் பெஷாவர் நகரை ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்துடன் இணைக்கும் பிரதான சாலை சந்திப்புகள் வழியாக போக்குவரத்து தடைபட்டிருந்தது.


    இந்நிலையில், கடந்த மாதம் மூடப்பட்ட இரு எல்லைகளையும் உடனடியாக திறக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த எல்லைகளை மூட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்பதை இனியாவது ஆப்கானிஸ்தான் உணர்ந்துப் பார்த்து, நடந்துகொள்ள வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
    Next Story
    ×