search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்து நதி நீர் பங்கீடு: இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
    X

    சிந்து நதி நீர் பங்கீடு: இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

    சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான இரண்டு நாள் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் தொடங்கியுள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான இரண்டு நாள் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

    இந்தியா தரப்பில் சிந்து நீர் கமிஷனர் பி.கே.சக்சேனா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

    பாகிஸ்தான் அதிகாரி மிர்ஸா அசிப் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கடந்த 1960-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆயூப் கான் ஆகியோர் முன்னிலையில் பாகிஸ்தானின் கராச்சியில், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சிந்து நதி தொகுப்பில் இந்த நதிக்கு கிழக்கே உள்ள ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளை இந்தியா முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், மேற்கே உள்ள ஜீலம், செனாப், சிந்து ஆகிய நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து நதியில் இருந்து 80 சதவீத நீரை பாகிஸ்தான்தான் பயன்படுத்தி
    வருகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுக்கொரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதற்கு முந்தைய ஆண்டான 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற உரி தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்ததால் பேச்சுவார்த்தை தடைபட்டு போனது.

    இத்தகைய சூழலில், ஓராண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் வழியாக பாயும் நதிகளின் மீது இந்தியா 3 நீர்மின் திட்டங்களை கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் தனது கவலையை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் 1960-ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாக பாகிஸ்தான் கருதுகிறது.
    Next Story
    ×