search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங் அன் அண்ணன் கொலை: வடகொரிய தூதரக அதிகாரிக்கு தொடர்பு?
    X

    கிம் ஜாங் அன் அண்ணன் கொலை: வடகொரிய தூதரக அதிகாரிக்கு தொடர்பு?

    கிம் ஜாங் அன் அண்ணன் கொலை வழக்கில் வடகொரியாவை சேர்ந்த மேலும் ஒரு நபரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    கோலாலம்பூர்:

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). சீனாவில் வசித்து வந்த இவர், கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


    இந்த கொலையில், வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங், இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா, அவரது மலேசிய காதலர் பாரித் பின் ஜலாலுதீன் ஆகியோரை மலேசிய போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் வடகொரியாவை சேர்ந்த ரி ஜாங் கோல் (46) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது இந்த கொலை வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது.

    இந்த நிலையில் கிம் ஜாங் நாம் கொலையில் வடகொரிய தூதரகத்தின் 2-ம் நிலை செயலாளரான ஹியான் குவாங் சாங் மற்றும் வடகொரிய விமான நிறுவனத்தின் ஊழியர் கிம் உக் இல் ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக மலேசிய போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி வடகொரிய தூதருக்கு மலேசிய போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வடகொரிய தூதரகம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த எங்களை அனுமதிக்கும் எனவும் நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அவர்கள் இருவரும் எங்களை தேடி வருவதற்கு நிர்ப்பந்திப்போம்” என தெரிவித்தார்.

    இவர்களை தவிர வடகொரியாவை சேர்ந்த மேலும் ஒரு நபரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அவர் யார்? என்ன செய்கிறார்? என்பது குறித்த தகவல்களை போலீசார் தெரிவிக்கவில்லை. மேலும் கொலை நடந்த சிறிது நேரத்தில் மலேசியாவில் இருந்து தப்பி ஓடிய வடகொரியாவை சேர்ந்த 4 பேரை கைது செய்வதிலும் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர். கிம் ஜாங் நாம் கொலையில் வடகொரியாவின் தொடர்பு இருக்கும் என தென்கொரியா தொடர்ந்து சந்தேகம் எழுப்பிவரும் நிலையில், இந்த கொலை வழக்கில் வடகொரியாவை சேர்ந்த நபர்கள் அடுத்தடுத்து சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    Next Story
    ×