search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளினுக்குப் பதில் மெக்மாஸ்டர்: புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் டிரம்ப்
    X

    பிளினுக்குப் பதில் மெக்மாஸ்டர்: புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இவர், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக பிளின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் பிளின் தனது பதவியை கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே அவர் பதவியில் நீடித்தார்.

    பிளின் பதவி விலகியதையடுத்து, தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜோசப் கெய்த் கெல்லாக் நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார்.



    இந்நிலையில், டிரம்ப் தன்னுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டரை நியமித்துள்ளார். தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கெய்த் கெல்லாக், மெக்மாஸ்டருக்கு அடுத்த நிலையில் பணியாற்ற உள்ளார். அவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் பணியாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×