search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்
    X

    உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.

    டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது கூறப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் அவர் பதவி ஏற்ற பிறகு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நேற்று பெண்கள் போராட்டம் நடத்தினர். டிரம்ப் ஆட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த பெண்கள் பேரணியை ஆலிவுட் நடிகர் அமெரிக்கா பெர்ரா தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது ஒவ்வொரு பெண்ணும் டிரம்பின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர் பதவி ஏற்ற கேபிடல் பகுதி உள்பட நாட்டின் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்துகின்றனர். எங்களால் டிரம்பை அதிபராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

    போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தனர். அவர்கள் டிரம்புக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் நடந்த பேரணியில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

    அதேபோன்று அமெரிக்காவில் சிகாகோ தெருக்களில் நடந்த பேரணியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். லாஸ்ஏஞ்சல்ஸ், நியூயார்க், சீட்டில், பாஸ்டன் மற்றும் மியாமி உள்ளிட்ட 300 இடங்களில் போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் கருஞ்சிவப்பு நிற பூனை வடிவ தொப்பிகளை அணிந்து இருந்தனர்.

    அதே போன்று இங்கிலாந்தில் லண்டனில் பெண்கள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தினர். அங்கு சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் அங்கு பெல் பாஸ்ட், கார்டிப், எடின்பர்க், லீட்ஸ், ஸிவர்பூல், மான் செஸ்டர், பிரிஸ்டல் உள்ளிட்ட நகரங்களில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் டிரம்புக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். சிட்னியில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நைரோபி, கென்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் முன்பு பெண்கள் பேரணியாக சென்று டிரம்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பார்சிலோனா, ரோம், ஆம்ஸ்டர்டாம், ஜெனீவா, புடாபெஸ்ட், பிராகுவே உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களிலும் டிரம்புக்கு எதிரான பெண்கள் போராட்டம் வெடித்தது.

    மொத்தத்தில் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×