search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி: ஆதரவாக கையெழுத்து வேட்டை
    X

    ஜப்பானையும் தாக்கிய ஜல்லிக்கட்டு சுனாமி: ஆதரவாக கையெழுத்து வேட்டை

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை கடந்து ஜப்பான் நாட்டின் முக்கிய நகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் பரவியது.
    டோக்கியோ:

    தடைசெய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய அறவழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

    இதேபோல், மும்பை, டெல்லி, குஜராத் என நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவடைந்த இந்த போராட்டம் தற்போது கடல் கடந்து உலகின் பிறநாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி, பெருந்திரளாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

    குறிப்பாக, அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற திரளான பெண்களில் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர்.

    இந்நிலையில், ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் உள்ள பங்குசாய் உள்ளிட்ட நான்கு முக்கிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் கையெழுத்து வேட்டையை நடத்தி வருகின்றனர்.



    தமிழர்களின் பழம்பெருமை மிக்க கலாச்சாரம் சார்ந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அன்னிய நாட்டு சக்திகளுக்கு இடமளிக்க மாட்டோம், எங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க இறுதிமூச்சு உள்ளவரை போராடுவோம் என பங்குசாய் நகரில் சுமார் 300 பேர் பங்கேற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைப்பாளர் தெரிவித்தார்.

    இதேபோல், இங்குள்ள நிஷி கசாய் பகுதியில் பிரமிட் பூங்கா, செய்ஷின்ச்சோவில் உள்ள ரியோகுச்சி பூங்கா, டொக்காய்ச்சிபா பகுதியில் உள்ள கயாபா பூங்கா, ட்சுகுபா பகுதியில் உள்ள டோஹோ பூங்கா, கவாசாகி நகரில் உள்ள ஃபியூஜிமி பூங்கா மற்றும் நகோயா பகுதியிலும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட பகுதிகளில் பெறப்படும் கையெழுத்து படிவங்கள் அனைத்தும் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×