search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்புக்கு எதிராக போராட்டம்: வன்முறையில் 6 போலீசார் காயம்
    X

    டிரம்புக்கு எதிராக போராட்டம்: வன்முறையில் 6 போலீசார் காயம்

    அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு எதிராக வாஷிங்டனில் நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு எதிராக வாஷிங்டனில் நேற்று போராட்டம் நடந்தது.

    அதில் பதவி ஏற்பு விழா நடந்த கேபிடல் ஹில் அருகே ஒரு கும்பல் திரண்டது.

    அங்குள்ள 12-வது மற்றும் கே.தெருக்களில் திரண்ட அவர்கள் முகமூடிகளுடன் கருப்பு நிற உடைகளை அணிந்து இருந்தனர்.

    பின்னர் டிரம்புக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பிய அவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.

    சிலர் கைகளில் மரத்தடிகள், ஆக்கி மட்டைகள் மற்றும் கற்களை வைத்திருந்தனர். அவற்றால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீது கற்களை வீசியும், தடியால் அடித்தும் தாக்குதல் நடத்தினார்கள். போலீசார் மீதும் கற்களை வீசியும் தாக்கினார்கள். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கலவரக்காரர்களை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மிளகு பொடிகளை தூவினர். தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். அதை தொடர்ந்து கலவரக்காரர்கள் கலைந்து ஓட்டம் பிடித்தனர்.

    போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும், மேலும் ஒருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்ட 217 பேரை போலீசார் கைது செய்தனர். டிரம்புக்கு எதிராக அமெரிக்கா மட்டுமின்றி லண்டன், ஷாங்காய், பெர்லின் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×