search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்
    X

    ஜல்லிக்கட்டை ஆதரித்து அமெரிக்க தமிழர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்

    கடல்கடந்து பரவியுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் ஒருகட்டமாக அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
    நியூயார்க்:

    தடைசெய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய அறவழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

    இதேபோல், மும்பை, டெல்லி, குஜராத் என நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவடைந்த இந்த போராட்டம் தற்போது கடல் கடந்து உலகின் பிறநாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி, பெருந்திரளாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.



    குறிப்பாக, அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவ்வகையில், தெற்கு புளோரிடா பகுதியில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற திரளான பெண்களில் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர்.
    Next Story
    ×