search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது
    X

    பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

    பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    வாஷிங்டன்:

    பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தன. பதற்றத்தில் ஆழ்த்தின. இந்த தாக்குதல்களின்போது மூளையாக இருந்து செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடன் என அமெரிக்கா கண்டறிந்தது.

    சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந் தேதி பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க ராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

    அப்போது பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை அங்கிருந்து ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படுகிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்து அவ்வப்போது சி.ஐ.ஏ. வெளியிட்டு வருகிறது.

    அந்த வரிசையில் நேற்று முன்தினமும் பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த ஆவணங்களில் அவர் ஐ.எஸ். இயக்கத்தின் பொறுமை இழப்பு, வன்முறை தந்திர உத்திகள், அல்கொய்தா இயக்கம் மறைந்து வரும் நிலை ஆகியவை பற்றி, பின்லேடன் கவலைப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

    அதில் ஒரு ஆவணம், பின்லேடன் தனது மகன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது. அதில் அவர், தன் மகன்களின் உடலில் எலெக்டிரானிக் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.

    அரேபிய தீபகற்ப பகுதியை சேர்ந்த அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனர் நாசர் அல் உஹாய்ஷிக்கு பின்லேடன் எழுதிய கடிதமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த கடிதத்தில் பின்லேடன், மத அடிப்படையிலான ஒரு ராஜ்யத்தை அமைப்பதற்கான சூழல்கள் சரிவர அமையவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக மிக வேகமாக செயல்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

    அப்படிப்பட்ட ஒரு ராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கிடைக்கும் என்பது ஆதாரபூர்வமாக காட்டப்படுகிற வரையில், ஒன்றுக்கும் பலனற்ற விதத்தில் ரத்தம் சிந்தக் கூடாது எனவும் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

    2010-ம் ஆண்டுக்கு முன் பின்லேடன் பல தரப்பினருக்கும் எழுதிய கடிதங்களில், தனது குழுவினர் அமெரிக்காவை தொடர்ந்து எதிரியாக கருதி வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×