search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்றவன் பிடிபட்டான்
    X

    இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்றவன் பிடிபட்டான்

    துருக்கி தலைநகர் இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    இஸ்தான்புல்:

    துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

    கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

    இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.

    இந்த தாக்குதலை நடத்தியவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளதாக இன்று துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    துருக்கி-ஐரோப்பா எல்லைப் பகுதியான எஸென்யூர்ட் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது 4 வயது மகனுடன் பதுங்கி இருந்த அபு முஹம்மது ஹொராசானி என்பவனை போலீசார் நேற்று கைது செய்ததாகவும், கைதான நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவன் என்றும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
    Next Story
    ×