search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் கொரிய பாராளுமன்றத்தில் அதிபர் பார்க்கின் பதவியை பறிக்க தீர்மானம் தாக்கல்
    X

    தென் கொரிய பாராளுமன்றத்தில் அதிபர் பார்க்கின் பதவியை பறிக்க தீர்மானம் தாக்கல்

    அதிபர் பார்க் கியுன் ஹையின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை தென்கொரிய பாராளுமன்றத்தில் 3 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்து நேற்று தாக்கல் செய்தன.
    சியோல்:

    தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை, நெருங்கிய தோழியால் ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகிறார். சோய் சூன் சில் என்ற அவரது தோழி, அதிபரிடத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி, தனது தொண்டு நிறுவனத்துக்கு பெரும் தொழில் அதிபர்களிடம் மிகப்பெரும் தொகையை நன்கொடைகளாகப் பெற்றுள்ளார்.

    சோய் சூன் சில்லும், அவருக்கு அரசு ரகசியங்களை கசிய விட்ட அதிபரின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் அதிபர் பார்க் கியுன் ஹையின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை தென்கொரிய பாராளுமன்றத்தில் 3 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்து நேற்று தாக்கல் செய்தன. இதில் 171 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    அதில், “அரசியல் சாசனத்தை காக்கவும், அரசியல் சாசன ஒழுங்கை மீட்கவும், அதிபர் பார்க் கியுன் ஹையை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

    இந்த பதவி பறிப்பு தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு 9-ந் தேதி நடைபெறும் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    தீர்மானம் நிறைவேறுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மொத்தம் உள்ள 300 உறுப்பினர்களில் எதிர்க்கட்சியினருக்கு 171 உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 29 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை பார்க் கியுன் ஹையின் சொந்தக் கட்சியான செனுரி கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×