search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்க் கியுன் ஹே
    X
    பார்க் கியுன் ஹே

    தென்கொரியா பெண் அதிபருக்கு எதிராக 9-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்

    தென்கொரியா நாட்டின் பெண் அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பாராளுமன்றத்தில் வரும் 9-ம் தேதி பலப்பரீட்சை நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
    சியோல்:

    தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

    மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

    இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

    தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக இந்தவாரம் வெளியான கருத்துக்கணிப்பில் அவர் மேலும் 4 சதவீதம் பின்தங்கியுள்ளார். அவரது செயல்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 93 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தென்கொரியா அதிபரின் செல்வாக்கு இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவகையில் தற்போது அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

    இந்நிலையில், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஆட்டம், பாட்டத்துடன் பேரணியில் பங்கேற்ற மக்கள் பார்க் கியூன் ஹே கைது செய்யப்பட வேண்டும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று முழக்கமிட்டபடி அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

    பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர், புத்தமத துறவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த பேரணி இரவு 8 மணியளவில் அதிபர் மாளிகை அமைந்திருக்கும் பகுதியை அடைந்தது.

    அப்போது, பேரணியாக வந்த அனைவரும் தங்களது மெழுகுவர்த்திகளை அணைத்தனர். ஒருநிமிடத்துக்கு பின்னர், மீண்டும் மெழுகுவர்த்திகளை ஏற்றி, ‘அதிபர் பதவியில் இருந்து பார்க் கியூன் ஹே இறங்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்ற முழக்கங்களுடன் அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே பார்க் உரையாற்றினார்.

    சட்டப்படி ஒரு நிலையை பாராளுமன்றம் எடுத்தால் அதிபர் பதவியைவிட்டு விலகவும், ஆட்சி அதிகாரத்தை பாராளுமன்றத்தால் அடையாளம் காட்டப்படும் நபரிடம் ஒப்படைக்கவும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது, நாட்டில் நிலவும் அமைதியின்மையையும், இறுக்கமான சூழ்நிலையை போக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும் என தனது உரையின்போது பார்க் குறிப்பிட்டார்.

    அவரது கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள அதிருப்தியாளர்கள் பாராளுமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக பார்க் கியுன் ஹே தந்திரமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    அவராகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு போவதை விட்டுவிட்டு, ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்படாது என்ற நம்பிக்கையில் அந்த வேலையை பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில், அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தென்கொரியாவின் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த தீர்மானத்தின்மீது வரும் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.

    300 உறுப்பினர்களை கொண்ட தென்கொரியா பாராளுமன்றத்தில் இந்த மூன்று எதிர்க்கட்சிகளின் பலம் 165 ஆக உள்ளது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிபெற செய்வதற்கு மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை (மெஜாரட்டி) தேவைப்படுகிறது.

    எனவே, ஆளும் சியனுரி கட்சியில் அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு எதிராக இருக்கும் சில எம்.பி.க்கள் துணையுடன் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிபெற வைத்து அவரை பதவியில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.



    Next Story
    ×