search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீது ஜப்பான், தென்கொரியா புதிய பொருளாதார தடை
    X

    வடகொரியா மீது ஜப்பான், தென்கொரியா புதிய பொருளாதார தடை

    ஐ.நா. சபையின் புதிய தடையை அடுத்து ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளும் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளன.
    டோக்கியோ:

    கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

    இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

    இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது.

    வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    ஆனாலும், மாதந்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ள வடகொரியா தவறுவதில்லை. வடகொரியாவின் இந்த ஆணவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றையும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் உருவாக்கின. இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தின்மீது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    வடகொரியாவிடம் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என பிறநாடுகளுக்கு தடை பிறப்பிப்பது உள்பட அந்நாட்டுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கக்கூடிய பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன.

    இந்த தீர்மானத்தை ஆதரித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நேற்று நடைபெற்ற ஓட்டெடுப்பில் வெட்டுரிமை (வீட்டோ) அதிகாரம் படைத்த அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளும் ஒருமனதாக வாக்களித்தன.

    வடகொரியாவின் ஒரே கனிமவளம் நிலக்கரிதான் என்பதும், நிலக்கரியை ஏற்றுமதி செய்வதன் மூலமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கோடி டாலர்கள் அந்நாட்டின் கருவூலத்தை நிரப்பி வருவதும், இந்த தொகையில் பெரும்பகுதியை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக வடகொரியா அதிபர் செலவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ‘எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வடகொரியாவின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக இருக்கும் நிலக்கரி ஏற்றுமதி மற்றும் உலக நாடுகளில் இருந்து பெறப்படும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிக்கும் தடை செய்யும் ஐ.நா.சபையின் தீர்மானம் அந்நாட்டின் அதிபருக்கு சம்மட்டி அடியாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், வடகொரியாவின் எதிரிநாடான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த ஜப்பான் நாட்டு மந்திரிசபையின் தலைமை செயலாளர் யோஷிஹிடே சுகா, ‘இந்த ஆண்டில் மட்டும் 20-க்கும் அதிகமான ஏவுகணைகளை பரிசோதித்தும், இருமுறை அணு ஆயுதங்களை சோதித்தும் வன்முறையில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் செயலை சகித்துக்கொள்ள முடியாது. வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கு முடிவுகட்டும் வகையில் அந்நாட்டின்மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம்.

    ஜப்பானில் இருந்தபடி வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் சொத்துகளையும் முடக்குவோம்’ என தெரிவித்துள்ளார்.

    @யோஷிஹிடே சுகா
    Next Story
    ×