search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசாருக்கு தடை குறித்து ஐ.நா. சபையில் இந்தியா கேள்வி
    X

    மசூத் அசாருக்கு தடை குறித்து ஐ.நா. சபையில் இந்தியா கேள்வி

    “பதன்கோட் விமானப்படை தள தாக்குதலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி முடிவு எடுக்க 9 மாதங்களா?” என ஐ.நா. சபையில் இந்தியா கேள்வி எழுப்பியது.
    நியூயார்க்:

    “பதன்கோட் விமானப்படை தள தாக்குதலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி முடிவு எடுக்க 9 மாதங்களா?” என ஐ.நா. சபையில் இந்தியா கேள்வி எழுப்பியது.

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பதன்கோட் இந்திய விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு நமது பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி தந்தனர். 4 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலின் முடிவில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல்களை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினர்தான் நடத்தினர் என்பதை நமது புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. இந்த தாக்குதல்களை திட்டம் போட்டு கொடுத்து நடத்தியது அதன் தலைவரான மசூத் அசார்தான் என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது.

    இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொன்ன வாக்கின்படி நடந்து கொள்ளவில்லை.

    இதையடுத்து மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் மசூத் அசாருக்கு பொருளாதார தடை விதிக்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை கூறி, மசூத் அசார் மீதான நடவடிக்கைக்கு எதிராக சீனா நிற்கிறது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச்சபையில் சமத்துவ பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் நடந்த அமர்வில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சையத் அக்பருதீன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மசூத் அசார் போன்றவர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுப்பதற்கு ஒரு உலக அமைப்பு 9 மாதங்கள் எடுத்துக்கொள்வதா?” என தாக்கினார்.

    மேலும், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தனது சொந்த அரசியலில் சிக்கி தவிக்கிறது” எனவும் சாடினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “ஒவ்வொரு நாளும் நமது கூட்டு மன சாட்சி, சில பிராந்தியங்களில் பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகள் என்று எந்த அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருக்கிறதோ, அந்த அமைப்பை சார்ந்த தலைவர்கள்மீது பொருளாதார தடை விதிப்பதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க 9 மாதங்கள் எடுத்துக்கொள்கிறது” எனவும் விமர்சித்தார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய முடியாமல், இது தொடர்பான விவாதங்கள் நத்தை வேகத்தில், முடிவின்றி செல்வதையும் அக்பருதீன் சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×