search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு கேமரூன் வழங்கிய நிதி உதவியின் பின்னணியில் லைக்கா நிறுவனர்: டெய்லி மெயில் தகவல்
    X

    இலங்கைக்கு கேமரூன் வழங்கிய நிதி உதவியின் பின்னணியில் லைக்கா நிறுவனர்: டெய்லி மெயில் தகவல்

    இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் வழங்கிய நிதி உதவியின் பின்னணியில் லைக்கா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
    லண்டன்:

    பிரிட்டனில் உள்ள இலங்கைத் தொழில் அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வழங்கிய 1 மில்லியன் பவுண்ட் நிதியினை அடுத்தே பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் இலங்கைக்கு 6.6 மில்லியன் பவுண்ட் நிதி உதவி உயர்த்தி வழங்கியிருப்பதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
     
    மேலும் இந்த நிதி உதவியானது போரினால் பாதிக்கப்பட்டு தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் மற்றும் போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்காக வழங்கப்பட்டது.
     
    இவ்வாறு வழங்கப்பட்ட நிதியில், 44 வயதான சுபாஸ்கரன் அல்லிராஜா தான் பிறந்து வளர்ந்த இடமான இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
     
    சுபாஸ்கரன் அல்லிராஜா 160 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சொத்துக்களுடன் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் 640வது இடத்தில் உள்ளார்.
     
    இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் அரசு 2009 ஆம் ஆண்டு முதல் நிறுத்தியிருந்தது. எனினும் லைக்கா நிறுவனம் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நிதி உதவிகளை வழங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில் மீண்டும் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கியது.
     
    லைக்கா மொபைல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு 176000 பவுண்ட் மற்றும் 2012 ஆம் ஆண்டு 250,000 பவுண்ட் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர் இலங்கைக்கான நிதி உதவியினை இங்கிலாந்து அரசு 1.3 மில்லியன்களில் இருந்து 5.5 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்தியிருந்தது. 2013 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கான மொத்த உதவித் தொகை 10.2 மில்லியன் பவுண்டுகளாவும் அமைந்திருந்தது. இது இங்கிலாந்து அரசு ஈராக்கிற்கு வழங்கியதனை விட 3 மில்லியன் பவுண்ட் அதிகமென டெய்லி மெயில் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
    இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இலங்கையின் வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் டேவிட் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை சுயாதீனமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்.
     
    போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் வேலைத் திட்டத்துக்கு 2.1 மில்லியன் பவுண்டுகளையும்,  கைதுசெய்யப்பட்ட தமிழ்த்தாய் ஒருவரின் மனித உரிமைக்காக பேசிய இரண்டு ஆர்வலர்களின் கைதுக்காகவும்  வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
     
    பிரிட்டனின் இந்த நிதியுதவி அதிகரிப்பு மற்றும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நிதியுதவி வழங்கும் நடவடிக்கையின் பின்னணியில் லைக்கா நிறுவனம் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வழங்கிய நன்கொடை இருப்பதாக டெய்லி மெயில் பத்திரிகை  குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வரும் நன்கொடை தொடர்பாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×