search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விமானப்படைக்கு 3 விமானங்களை விற்க ரூ.38 கோடி லஞ்சம் - அமெரிக்க கோர்ட்டில் விமான நிறுவனம் ஒப்புதல்
    X

    இந்திய விமானப்படைக்கு 3 விமானங்களை விற்க ரூ.38 கோடி லஞ்சம் - அமெரிக்க கோர்ட்டில் விமான நிறுவனம் ஒப்புதல்

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இந்திய விமானப்படைக்கு 3 விமானங்களை விற்பதற்கு ரூ.38 கோடி லஞ்சம் தரப்பட்டதாக அமெரிக்க கோர்ட்டில் விமான நிறுவனம் ஒப்புக்கொண்டது.
    வாஷிங்டன்:

    மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் விமான நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 3 ‘எம்ப்ரேயர்-145’ ரக போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    2008-ம் ஆண்டு, ஜூலை மாதம் 3-ந்தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 208 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,393 கோடி) ஆகும். இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு எம்ப்ரேயர் நிறுவனம், இந்திய தரப்புக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த ஒப்பந்தத்தை பெறுவதில், ‘ஏஜெண்ட் டி’ என்ற ஷெல் கம்பெனி (பெயரளவுக்கு நிறுவப்படுகிற கம்பெனி) உதவியது அம்பலத்துக்கு வந்தது.

    இந்தியாவிடம் இருந்து இந்த 3 விமான கொள்முதல் ஆர்டர் பெற்றதின் மூலம் எம்பிரேயர் நிறுவனம் 84 மில்லியன் டாலர் (சுமார் ரூ.562 கோடி) லாபம் ஈட்டி உள்ளது.

    இதன் காரணமாக தனக்கு இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஷெல் கம்பெனிக்கு எம்ப்ரேயர் விமான நிறுவனம் 208 மில்லியன் டாலர் (சுமார் ரூ.38 கோடியே 59 லட்சம்) லஞ்சமாக கொடுத்திருக்கிறது. இதை அமெரிக்க கோர்ட்டில் எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

    இதேபோன்று டொமினிக் குடியரசு, சவுதி அரேபியா, மொசாம்பிக் நாடுகளும் விமானம் வாங்குவதற்கு எம்ப்ரேயர் விமான நிறுவனம், பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி உள்ளது. இதையும் அந்த நிறுவனம், அமெரிக்க கோர்ட்டில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

    இதை அமெரிக்க அரசு துணை அட்டார்னி ஜெனரல் லெஸ்லீ ஆர். கால்டுவெல் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “3 வெவ்வேறு கண்டங்களில் உள்ள நாடுகளில் அரசு விமான கொள்முதல் ஆர்டர்களை பெறுவதற்காக எம்ப்ரேயர் நிறுவனம், பல கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்திருக்கிறது” என்றார்.

    இந்தியாவின் விமான கொள்முதலுக்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ள ஷெல் கம்பெனி, சிங்கப்பூரை சேர்ந்தது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான விமான பேர ஊழல் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு எம்ப்ரேயர் நிறுவனம், அமெரிக்காவுக்கு 205 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,373 கோடி) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    இது தொடர்பாக ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரிடம் டெல்லியில் நேற்று நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய விமானப்படைக்கு 3 விமானங்களை 208 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. நடத்தி வருகிற விசாரணை, இந்திய சட்டங்களின்படி தொடரும்.

    இந்திய சட்டங்களில் இருந்து அமெரிக்க சட்டங்கள் மாறுபட்டவை. அமெரிக்க சட்டப்படி, குற்றவியல் நடவடிக்கைகளை அபராதம் செலுத்தி சமரசத்துக்கு கொண்டு வந்து விட முடியும்.

    ஆனால் இந்தியாவில் மிகச்சிறிய விவகாரங்களில் மட்டுமே சமரசம் செய்து கொள்ள சட்டம் இடம் அளிக்கிறதே தவிர பெரிய அளவிலான குற்றங்களில் சமரசத்துக்கு இடம் இல்லை.

    கருப்பு பட்டியலில் ஊழல் நிறுவனங்களை சேர்ப்பது தொடர்பாக புதிய வழிமுறைகள் விரைவில் வகுத்து அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×